``30 ஆண்டுக்கால துயரம், வலி முடிவுக்கு வந்திருக்கிறது!" - ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த கொலை வழக்கில் ரவிச்சந்திரன், மதுரை சிறையிலிருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் பரோல் அனுமதிக்கப்பட்டு விளாத்திகுளம் அருகிலுள்ள சொந்த கிராமத்தில் இருந்தார்.

ரவிச்சந்திரன்

இந்த நிலையில் நேற்று இரவு ஊரிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு வந்தவர், சிறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு விடுதலையாகி வெளியே வந்தார். ரவிச்சந்திரனை கொட்டும் மழையிலும் பல்வேறு அமைப்பினர் மாலையிட்டு வாழ்த்தி வரவேற்றனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், "துயரம் எனக்கானது, ஆனால் என் மகிழ்ச்சி அனைவருக்குமானது. செங்கொடியின் தியாகத்தை இந்த கணத்தில் நெஞ்சில் ஏந்துகிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எங்கள் விடுதலைக்கு திறவுகோல் தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், விடுதலையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் நன்றி.

ரவிச்சந்திரன்

எங்கள் விடுதலைக்காக உழைத்திட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நன்றி. விடுதலைக்கு குரல் கொடுத்து, போராடி, சிறைப்பட்ட தமிழ் திராவிட உணர்வாளர்களுக்கு நன்றி. உலகத்தமிழ் இனத்தின் அன்பை என்னால் என்றும் மறக்க முடியாது. அரசியல்ரீதியாகவும், தார்மீகரீதியாகவும் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

நீண்ட நாள் பரோலில் தொடர்வதற்கு உழைத்த எம்.பி கனிமொழி, அமைச்சர் நேருவுக்கு நன்றி.

இத்தனை ஆண்டுகளாக எனக்காக இருந்த குடும்பத்தினர் தோழர்கள் உடன்தான் எனக்கான அடுத்தகட்ட பயணம்.

இனி சமூகத்துக்கு பயன்படும் வகையில்தான் என் வாழ்வு இருக்கும். இனி ஊரில் விவசாயம், எழுத்துப் பணிகளை தொடர உள்ளேன். என் தாயாரின் 30 ஆண்டுக்கால துயரம், வலி முடிவுக்கு வந்துள்ளது.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது

இலங்கை அகதிகள் முகாமும் ஒரு சிறைக்கூடம் போலத்தான். அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள, விடுதலை செய்யப்பட்டுள்ள மற்ற நபர்கள் சட்டரீதியான நடவடிக்கை மூலமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு எங்களுடைய விடுதலையை தடுத்தது மத்திய அரசு. 2004-ம் ஆண்டிலேயே எங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும். ஆனால், 15 ஆண்டுகள் எங்கள் விடுதலையை தாமதப்படுத்தியது மத்திய அரசு.

மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது. திருமணம் குறித்த எந்த எண்ணமும் இப்போது இல்லை. இந்த 30 ஆண்டுகளில் பெற்றது அன்புள்ள உறவுகள் மட்டும்தான். ஆனால், இழந்தவைகளுக்கு கணக்கே இல்லை. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. கடந்த ஓராண்டு பரோல் காலத்தில் அந்த நோய்களில் இருந்து கொஞ்சம் தேறியுள்ளேன்.

ரவிச்சந்திரன்

வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போல் தண்டனைக்குப் பிறகு விடுதலை பெற்றவர்களின் பழிகளை துடைப்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை, சட்ட ஆணையத்தின் மூலம் மேற்கொள்வோம்.

இந்த வழக்கு அரசியல் வழக்கு. இன்னும் விசாரணை முடிவடையாமல்தான் உள்ளது. இந்த வழக்கில் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் தொடர்பில் உள்ளன. அவர்கள் மீது கைவைக்க முடியாது என்பதால், எங்களை வைத்து வழக்கை முடித்துக் கொண்டார்கள். தமிழரின் அறம்தான் எங்களை இன்று விடுதலை செய்துள்ளது.

நீண்ட நாள் ஆயுள் தண்டனை சிறைவாசிகளான இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், அதனை முதலமைச்சர் செய்வார் என நம்புகிறோம்.

சிறைவாசிகள் விடுதலைக்கான தனி சட்டம் தமிழகத்தில் இல்லை. அந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

ஆயுள் தண்டனை சிறைவாசிகள் தொடர்பான சீர் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. விடுதலைக்கான விதிகள்தான் உள்ளன. அந்த விதிகளை கவர்னர் புறக்கணிக்கலாம். எனவே அதை சட்டமாக இயற்ற வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/s4D5R6c

Post a Comment

0 Comments