விருதுநகர்: பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்... தவறிவிழுந்து கல்லூரி மாணவர் பலி!

அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவருடைய மகன் மாதேஸ்வரன்(வயது 19). இவர் விருதுநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வேதியியல் படித்து வந்தார். இந்நிலையில் மாதேஸ்வரன் கல்லூரிக்கு செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து அரசு நகரப்பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாறு மாதேஸ்வரன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மாதேஸ்வரன்

இந்நிலையில் பாலவநத்தம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது படியில் தொங்கியவாறு பயணம் செய்த மாதேஸ்வரன் திடீரென தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மாதேஸ்வரன் அதிக ரத்தக்கசிவு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தசம்பவம் குறித்து தகவல் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீஸார் உயிரிழந்த மாணவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பான புகாரின் பெயரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு பேருந்தில் வந்த மாணவர் ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பஸ்பயணிகள் பேசுகையில், "காலை மற்றும் மாலை இருநேரங்களிலும் பள்ளி, கல்லூரிகள் முடியும் நேரத்திலும் அருப்புக்கோட்டையிலிருந்து மற்ற ஊர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் படியில் தொங்கியவாறே உயிரை பணையம் வைத்து பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பள்ளி மாணவி ஒருவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்தது.

அதற்கு காரணமும் மாணவர்கள் செல்ல குறிப்பிட்ட அந்தநேரத்தில் பேருந்து வசதி இல்லாதது தான். இந்நிலையில் இரண்டாவது சம்பவமாக அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவர், பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து இறந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. எனவே, பிரச்னை என்னவென்பதை அறிந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.



from Latest News https://ift.tt/67dZ9UD

Post a Comment

0 Comments