``இதை வியாபாரமாக பார்க்காதீர்கள்!” – முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை கூறுவதென்ன?

புதுச்சேரி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டுவந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பொதுமருத்துவமனையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்து பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தியிருந்தார். இவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதா என மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “புதுச்சேரி அரசு மருத்துவ துறையை மேம்படுத்த மாதமாதம் கூட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது. அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்து.

முதல்வர் ஸ்டாலின்

சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட உள்ளது. புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாகுறை இல்லை.  அரசு நெடுநாள்களாக வரி ஏற்றவில்லை. மாநில அரசு வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக வலி தெரியாமல் வரி உயர்த்தப்பட வேண்டிய சூழலில் அரசு உள்ளது, அது மக்களை பாதிக்காத அளவு இருக்கும். மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும், இதை அவர் வியாபாரமாக பார்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும். இதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட புதுச்சேரி ஒட்டியுள்ள  தமிழக மாவட்டங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்” என்றார்.



from Latest News https://ift.tt/x8i47aZ

Post a Comment

0 Comments