முன்னாள் அமைச்சரின் பெயரில் பணமோசடி - வேலூர் அதிமுக பிரமுகர் சிறையிலடைப்பு!

வேலூர் காகிதப்பட்டறையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான எஸ்.பி.சுகுமார், முன்னாள் அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதைபோல காட்டிக்கொண்டு பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் நீள்கின்றன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அந்த முன்னாள் அமைச்சரின் பெயரைச்சொல்லி ரேஷன் கடை பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசுப்பணிகளை வாங்கித்தருவதாகவும் லட்சக்கணக்கில் பணம் சுருட்டியிருக்கிறாராம் சுகுமார். பணத்தை இழந்தவர்கள் திரும்பக் கேட்டுத் தொந்தரவு செய்யும்போதெல்லாம், தற்கொலைக்குத் தூண்டுவதாக அவர்களின் பெயர்களுடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியூருக்குத் தப்பி ஓடிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம் அவர். சமீபத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த முன்னாள் அமைச்சர் குறித்து அவர் பதிவிட்டிருந்த கருத்துகளும் சர்ச்சையாகின.

சுகுமார்

‘‘மந்திரியிடம் ஏமாந்துவிட்டேன். என் கல்யாண நாளிலேயே நான் தூக்கில் தொங்கப் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’’ என பதிவிட்டு விட்டு, திடீரென தலைமறைவானார் அவர். இந்த நிலையில்தான் வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண், எஸ்.பி ராஜேஸ்கண்ணனை சந்தித்து, சுகுமார்மீது புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அவரின் புகாரில், ‘‘ரேஷன் கடையில் விற்பனையாளர் பணி வாங்கித்தருவதாகக்கூறி என்னிடம் ரூ.8.25 லட்சம் பெற்று, அவர் மோசடி செய்துவிட்டதாக’’ கூறியிருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடியபோது, வழக்கம்போல அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார், சுகுமாரை கையும் களவுமாகப் பிடித்துவந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/Vf9wvHi

Post a Comment

0 Comments