தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனந்த். 29 வயதான இவர், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் பால் வாங்கி விற்பனை செய்துவருகிறார் அவருக்கு உதவியாக 17 வயது நிரம்பிய சூர்யராஜ் என்பவர் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் வழக்கம் போல பால் வாங்கிக் கொண்டு திரும்பும்போது வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவரையும் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என ஆனந்த் மற்றும் சூர்யராஜ் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் தலையிட்டு சமரசம் செய்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், செல்வக்குமார் மற்றும் சுதாகர் ஆகியோர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. அதன்படி இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், ”இந்த வழக்கில் கைதான செல்வக்குமார் ஊத்துமலை அருகே உள்ள கங்கணாகிணறு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவியுடன் ஆனந்த் உறவில் இருந்திருக்கிறார். இது தொடர்பாக மனைவியுடன் செல்வக்குமார் சண்டையிட்டதால் அவரின் மனைவி, தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். அதன் பின்னரும் ஆனந்த் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது செல்வக்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் ஆனந்த என்று கருதிய செல்வக்குமார் அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதனால் தனது உறவினருடன் திட்டமிட்டு இருவரும் சேர்ந்து ஆனந்தை வழிமறித்து கம்பியால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுவன் சூர்யராஜையும் விரட்டிச் சென்று கொலை செய்திருக்கிறார்கள்.
இந்தக் கொலையைச் செய்ததும் தான் இத்தனை நாள்களாக எதிர்பார்த்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக நினைத்த செல்வக்குமார் உடனடியாக அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து வழிபட்டுள்ளார். அவரின் செல்போன் சிக்னல் மூலம் அங்கே சென்று அவரை கைது செய்தோம். கொலை நடந்தபோது செல்வகுமாருக்கு உதவியாக இருந்த சுதாகரும் கைதாகியுள்ளார்” என்றார்கள்.
from Latest News https://ift.tt/SI96nMZ
0 Comments