கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோயில் பகுதியில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``ஆட்சிபொறுப்பேற்ற ஓர் ஆண்டில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கினோம். ஓராண்டு என்பதைவிட, ஆறே மாதத்தில் முதல்வரின் உத்தரவால், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி, சரித்திர சாதனை படைத்தது. இப்போது, 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டு, அதனுடைய தொடக்க விழாவை இன்று கரூர் மாவட்டத்தில் நடக்கிறது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்வில் 20,000 விவசாயிகளுக்கான உத்தரவை ஒரே அரங்கத்திலே வைத்து முதல்வர் திருக்கரங்களால் வழங்க இருக்கிறார்கள். முதல்வரின் வழிகாட்டுதல்படி, 100 நாள்களில் இந்த 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு முழுவதுமாக வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சிசெய்துள்ளது. 20 வருஷம், 21 வருஷம் பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கெல்லாம் இதன்மூலம் இலவச மின் இணைப்பு கிடைக்க உள்ளது. அதை ஒரு விவசாயி நம்பாமல் ஆச்சர்யமாக கேட்டுள்ளார். அந்த வகையில் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தாண்டு 50,000 விவசாயிகள், கடந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகள் என இந்த இரண்டாண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச மின் இணைப்பு என்பது, 'நானும் ஒரு விவசாயி' என்று வெறும் வார்த்தையில் சொன்னால் போதாது. உண்மையான விவசாயியாக இருந்திருந்தால், நாலரை லட்சம் விவசாயிகள் பதிவு செய்து 20 ஆண்டுக்கு மேலாக காத்திருந்தார்கள். கடந்த காலங்களில் மின்மிகை மாநிலமாக இருப்பதாக வெளியில் பறைசாற்றிக்கொண்டார்கள். ஆனால், மின்மிகை மாநிலம் என்று சொன்னால், நாலரை லட்சம் விவசாயிகள் ஏன் பதிவு செய்தும் காத்திருக்ககூடிய சூழல் ஏற்பட்டது.
கடுமையான நிதி நெருக்கடியிலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலைமை மிக மோசமாக இருந்த சூழலிலும்கூட, தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன், பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பை வழங்கியே தீருவேன் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்பதை இந்த அரங்கத்திலே, விவசாயிகளின் நலன் காக்கும் பாதுகாவலராக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். விவசாயி என்பது வெறும் வார்த்தை அல்ல. செயலில் இருக்க வேண்டும். அந்த செயலை நமக்கு அரசின் உத்தரவாக தந்து, மின் இணைப்பை தந்திருக்கிற முதலமைச்சருக்கு நாமும், நம் குடும்பமும் வாழ்நாள் முழுக்க நன்றிகடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். இயங்குமா, இயங்காதா, செயல்படுத்த முடியுமா என்று கடந்த கால ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் நலிவடைந்த நிலையில் இருந்த மின்சாரத்துறையை மாற்றிக்காட்டிய முதலமைச்சர், ஒருபக்கம் மின் உற்பத்திக்கான திட்டங்கள், அதை விநியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் என பல விசயங்களை செய்துவருகிறார்.
அதற்காக, துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவில் முதலிடம் பெறும் என்ற உறுதியினை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், கரூரில் தடுப்பணைகள், அரசு வேளாண் கல்லூரி, கலைக்கல்லூரி, கதவணைகள் என்று வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை ஆட்சிபொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடங்களில் வழங்கியிருக்கிறார். நாடு சுதந்திரம் பெற்றபிறகு கரூர் மாவட்டத்துக்கு இந்த ஒன்றரை ஆண்டுகளில் கிடைத்த திட்டங்கள் போல் வேறு எப்போதும் கிடைக்கவில்லை" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/flJy3Uz
0 Comments