தூத்துக்குடி மூணு செண்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் உள்ளார். இவரின் மகன், தூத்துக்குயிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மூணு செண்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கரின் சிலை உள்ளது. இந்த சிலை அமைந்திருக்கும் பகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர், மாற்று சமூகத்தின் தலைவரின் ஜயந்தி விழாவினை முன்னிட்டு, பல தலைவர்களின் புகைப்படம் தாங்கிய போஸ்டரை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டியுள்ளார். இந்த நிலையில், மாரிமுத்துவின் மகன், இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தப் போஸ்டர்களை கிழித்துள்ளாராம். “வேற சமூக தலைவருக்கு போஸ்டர் ஒட்டுனா கிழிக்கத்தான் செய்வேன்” எனச் சொன்னாராம்.
இதனையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படவே, இரு தரப்பினையும் அழைத்து சமாதானம் செய்ததுடன், மாரிமுத்து மகனை அழைத்து போலீஸார் எச்சரித்துஅனுப்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலையில் மாரிமுத்து மதுபோதையில், மாற்று சமூக தலைவரின் ஜயந்தி விழாவிற்கு போஸ்டர் ஒட்டியது தொடர்பாக தெருவிற்குள் அவதூறாகப் பேசினாராம். இதனையடுத்து முகேஷ் தரப்பினர், மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது வீட்டின் பின்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மாரிமுத்து மீண்டும் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாரிமுத்து, முகேஷ் தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதலில் மாரிமுத்துவின் மகனை ஓட ஓட விரட்டி அரிவாளால வெட்டியுள்ளனர். இதில், சில காயத்துடன் அவர் தப்பியோடியுள்ளார். மகனை வெட்ட முயன்ற போது குறுக்கே வந்து தடுக்க முயன்ற மாரிமுத்துவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரிமுத்து மகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாற்று சமூகத்தின் தலைவர் பிறந்தநாளினை முன்னிட்டு போஸ்டர் ஒட்டியதும், அதனால் ஒரே சமூகத்திற்குள் மோதல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவமும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், அதே சமூகத்தைச் சேர்ந்த கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/0gX2nDN
0 Comments