விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 வயதான பெண் ஒருவர், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தன் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவர், தனியார் தங்கும் விடுதியொன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவருவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல ஒருநாள் மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில், இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில்பரதன், அவர் நண்பர் இருவரும், பெண்ணின் ஆண் நண்பரை 'கொன்றுவிடுவேன்' என மிரட்டி விரட்டினராம். இதனால் பயந்துபோன அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. பின் தனியாக சிக்கிக்கொண்ட அந்தப் பெண்ணை எழில்பரதனும், அவர் நண்பரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவுசெய்தவர்கள், 'இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால், குடும்பத்தோடு கொலைசெய்து விடுவோம்' எனக் கூறி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலால் பயந்துபோன அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, இருவரும், ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனராம். இதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான அந்தப் பெண், தற்கொலை முயற்சி வரை சென்றாராம். இதற்கிடையில், அந்தப் பெண் கேட்ட பணத்தினை தராததினால், அவரை மிரட்டுவதாக தாங்கள் வைத்திருந்த ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாகத் தெரிகிறது.
இதை அறிந்து மனவேதனையுற்ற அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரினை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார்... பெண்ணை மானபங்கம் செய்தல், கொலைமிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும், தற்போது எழில்பரதன், அவர் நண்பரை தேடி வருகின்றனர்.
from Latest News https://ift.tt/C8fmdwZ
0 Comments