தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு செயல் திட்டம் போட்டு நடைமுறைபடுத்தி வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த காலத்தில் சமூக நீதிக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள்.
பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு எம்.ஜி.ஆர் வருமான வரம்பு விதித்த போது கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கடந்த 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு மக்கள், எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால், தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக கூறினார்.
அதன்படி, அந்த வருமான வரம்பு என்ற அரசாணையை திரும்பப் பெற்றுக்கொண்டு ஓ.பி.சி மக்களுக்கு 30 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். இது எம்ஜிஆரின்ஆட்சியில் நடந்த வரலாறு. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தார். 50 சதவீத உச்சவரம்பை மீறி இருந்த போது அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடி அந்த உரிமையை பாதுகாப்பதற்கும், ஒன்பதாவது அட்டவணையில் இணைப்பதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். தற்போதும் அது பாதுகாப்பான முறையில் ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற்றிருப்பதற்கு அ.தி.மு.க அரசு, குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் காரணம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அகியோர் சமூக நீதிக்காகப் பாடுபட்ட நிலையில், அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்ம் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள். இது அ.தி.மு.க கட்சிக்கு விரோதம். இது மக்களுக்கு எதிரானது என்பதை அ.தி.மு.கவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பெற்றிருப்பது ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. உச்ச நீதிமன்றம் தன்னியல்பாக அதிகாரத்தை கையில் எடுத்து இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 6 பேரில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். 4 பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள். அவர்களை சிறப்பு முகாமில் அடைக்க கூடாது. இலங்கையிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அங்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என, ஏற்கனவே சுட்டிக் காட்டி இருந்தோம்.
அயல்நாடுகளுக்கு உறவினர்களோடு தங்கிடச் செல்ல விரும்பினால் அயல்நாடு செல்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். பா.ஜ.கவின் முன்னணித் தலைவர்களான மோடி, அமித் ஷா ஆகியோர் நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது, சூழலுக்கு ஒன்றைப் பேசுவது என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.
ஒரே மொழி ஒரே கலாசாரம் என்பதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியைத் தவிர பிற மொழியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இந்தி பேசக் கூடிய நாடாக ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நிலையில் அமித் ஷா, தமிழ் மீது அக்கறை இருப்பதைப் போல தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் மருத்துவம் கற்றத்தரவேண்டும் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது” என்றார்.
முன்னதாக, திருமாவளவனை வரவேற்பதற்காக விமான நிலையம் முன்பு கட்சியினர் திரண்டிருந்தனர். இதில், கட்சித் துண்டுகளை தோளில் போட்டு கொண்டு சிலர், ‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வீழ்ந்தது பொருளாதாரம்’ என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த நிர்வாகிகள் அவர்களிடமிருந்து பதாகைகளை பிடுங்கி கிழித்து அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
from Latest News https://ift.tt/3cyQa8t
0 Comments