Doctor Vikatan: வேகமாகப் பரவும் 'மெட்ராஸ் ஐ'... வராமல் தடுக்க முன்கூட்டியே டிராப்ஸ் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவுவதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன். மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க முடியுமா? கண்ணாடி அணிவது பாதுகாப்பு தருமா? முன்கூட்டியே ஐ டிராப்ஸ் பயன்படுத்துவது சரியா? வராமல் தடுக்க முன்கூட்டியே மாத்திரைகள், மருந்துகள் பயன்படுத்தலாமா? வந்தால் சீக்கிரம் குணமாக என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

'மெட்ராஸ் ஐ' அல்லது 'பிங்க் ஐ' எனப்படும் பாதிப்பு அடினோவைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படுவது. இதை மருத்துவத்தில் 'கன்ஜன்க்டிவிட்டிஸ்' (Conjunctivitis) என்று சொல்வோம்.

இந்தத் தொற்றானது மழைக்காலத்தில் மிக அதிகமாகப் பரவும். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாகவும், தொற்று பாதிப்புள்ள நபர் மற்றவர்களைத் தொடுவதாலும் பொருள்களைப் பகிர்ந்துகொள்வதாலும் அடுத்தவர்களுக்கும் எளிதில் பரவும்.

மெட்ராஸ் ஐ பாதிப்பைத் தடுக்க முதல் வழி, தொற்று பாதிப்புள்ள நபர்களிடமிருந்து விலகி இருப்பதுதான். சோப் உபயோகித்து அடிக்கடி கைகளைக் கழுவுவதும் அவசியம்.

தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இது தொற்றுள்ள நபரை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒட்டிக்கொள்வதில்லை. அவரிடமிருந்து தொற்று அடுத்த நபருக்கும் பரவுவதால் பாதிப்பது. நீங்கள் கேட்டிருப்பது போல மெட்ராஸ் ஐ பாதிப்பைத் தடுக்க சொட்டு மருந்தெல்லாம் கிடையாது. சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பின்பற்றுவது மட்டும்தான் ஒரே தீர்வு.

மெட்ராஸ் பாதித்துவிட்டால் உடனே கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்தத் தொற்றானது பாக்டீரியா மற்றும் வைரஸ் என இரண்டாலும் ஏற்படுவது என்பதால், இரண்டுக்குமான சிகிச்சை வேறு வேறாக இருக்கும். எந்த வகையான தொற்றுக்கு எந்தச் சிகிச்சை உதவும் என்பதை, பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து கண் மருத்துவரால்தான் சரியாக முடிவு செய்ய முடியும்.

Eyes

ஒருவேளை தொற்று பாதிப்பு ரொம்பவும் தீவிரமாக இருந்தால் ஆன்டிபயாடிக் டிராப்ஸ், கண்களை வறண்டுபோகாமல் வைத்திருக்கும் லூப்ரிகன்ட்ஸ், ஸ்டீராய்டு டிராப்ஸ் போன்றவை தேவையா என்பதையும் கண் மருத்துவர் முடிவு செய்து பரிந்துரைப்பார்.

கான்டாக்ட் லென்ஸ் அணியும் வழக்கமுள்ளோர், மெட்ராஸ் ஐ பாதிப்புள்ளபோது அவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/JvMnIyQ

Post a Comment

0 Comments