தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் Vs முதல்வர்கள்... ஆளுநர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது யார்?!

பா.ஜ.க ஆளாத கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான முட்டல் மோதல்கள் நாள் தோறும் அதிகரித்தவாறே இருக்கிறது. சமீபத்தில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காத வகையில் இப்பிரச்னை வளர்ந்து நிற்கிறது.

தமிழ்நாட்டைப்  பொறுத்தவரைச் சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானங்களை ஆளுநர் நிகாரித்து திருப்பி அனுப்புவதும், கிடப்பில் போட்டு வைப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

ஸ்டாலின், ஆளுநர் ரவி

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக முதல்வருக்கு வழங்கி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மேலும், 'துப்பாக்கிக்குத் துப்பாக்கியால் தான் பதில், அக்னிபாத்  திட்டத்திற்கு ஆதரவு, நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் பேசியது, ஜி.யு போப் பற்றி சர்ச்சை கருத்து, தனியாக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியது' என்று தமிழ்நாட்டில் ஆளுநராக  பதவியேற்று ஓராண்டில் சர்ச்சை கருத்துக்களையும், அரசியல் ரீதியாகவும் பதபதக்க வைத்து வருகிறார். இதனால், ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என தி.மு.க கோரிக்கை வைத்திருந்தது. 

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தநிலையில், ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டுமெனக்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க திட்டமிட்டது. அதன்படி, கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு, தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் மனுவில் கையெழுத்திட்டனர். இந்தச்சூழலில், கடந்த 2-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்கு பறந்தார். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதற்கான மனுவை  குடியரசுத்தலைவரிடம் அளித்துவிட்டதாக தி.மு.க தெரிவித்தது. குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில், "ஆளுநர் ரவி சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறார். மத வெறுப்பை தூண்டி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

திரெளபதி முர்மு

அரசியல் சாசன சட்டப்பிரிவு 159-ன் படி தான் எடுத்த உறுதிமொழியையே ஆளுநர் ரவி மீறிவிட்டதால் அவரை திரும்பப் பெற வேண்டும்" எனக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதுபோக, ஆளுநரிடம் அளித்த 20 மசோதாக்கள் குறித்த விவரங்களும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மோதல் போக்கு இவ்வாறு இருக்க பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும்  கேரளாவிலும்  முதல்வருக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையிலான  வார்த்தைப்போர்  உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆரிப் முகமது கானை ஆளுநராக மத்திய அரசு  நியமித்தது முதலே கருத்து மோதல்கள் நிலவிவருகின்றன. குறிப்பாக, கேரள அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளைத் திருப்பி அனுப்புவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களை விமர்சிப்பது எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு சம்பவங்களைச்  சொல்லலாம்.

அரிஃப் முகமது கான், பினராயி விஜயன்

குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைப் பதவி விலகுமாறு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயனோ, "துணைவேந்தர்கள் யாரும் பதவி விலக வேண்டாம். பதவி விலகச் சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை"என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில், கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஆரிப் முகமது கான்

இந்த கூட்டத்தில், கவர்னரை மாற்றுவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. சட்ட பல்கலைக்கழகம் தவிர, மாநிலத்திலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக கவர்னர் இருந்துவருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் விதிகளிலும் மாற்றம் ஏற்படுத்தி தனித்தனி மசோதாக்கள் கொண்டுவர அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இரு மாநிலங்களிலும் ஆளுநர்களை  திரும்பப்பெறும்  நடவடிக்கைகள் அடுத்தடுத்து தீவிரமாகியுள்ளது. கேரளாவை ஒப்பிடும் போது தமிழ்நாடு அரசு ஒருபடி மேல் சென்று குடியரசுத்தலைவரிடம் எம்.பிக்கள் மனு அளித்திருக்கிறார்கள். இது கேரளா மற்றும் தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.



from Latest News https://ift.tt/0nblxDy

Post a Comment

0 Comments