பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும் போது மாற்றுத் திறனாளிகள் குறித்து பெருமையாக பேசினார். “ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடிய மெஷின் 95 பேருக்கு வழங்கப்படுகிறது.” என்றார். அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்தபோது Made in China என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் 40 டெசிபல் வரை கேட்கும், 10 கிராம் எடை, 6 வால்யம் லெவல் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தத். இதை இணையத்தில் தேடிய போது இதே சிறப்பம்சங்களுடன் கூடிய Cyber Sonic நிறுவனத்தின் கருவி ரூ.345 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ.1,999 மதிப்பு கொண்ட அந்தக் கருவியை அமேசான் 83% தள்ளுபடி போக ரூ.345க்கு விற்பனை செய்வதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. எப்படிப் பார்த்தாலும் அண்ணாமலை கூறிய ரூ.10,000 கணக்கு வரவில்லையே என பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜனை தொடர்பு கொண்டு விவரங்களை சொல்லி விளக்கம் கேட்டோம், ``லயன்ஸ் கிளப் உதவியுடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர்கள்தான் இந்த கருவியை முழுவதுமாக வாங்கிக் கொடுத்தனர்.

செயற்கை காலுக்கு மட்டும்தான், நாங்கள் நேரடியாக அணுகினோம். லோக்கலில் விசாரித்தவரை காது கேட்கும் கருவி உள்பட எல்லாமே ரூ.10,000க்கு மேல் தான் கிடைத்தது. 10,000க்கு கீழ் எதுவும் இல்லை. நீங்கள் அனுப்பிய விவரங்களை லயன்ஸ் கிளப் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளேன்.” என்றார்.
from Latest News https://ift.tt/pLlFxwQ
0 Comments