கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் உள்ளார். நாட்டின் இளம் வயது மேயர் என்ற புகழைப்பெற்ற ஆர்யா ராஜேந்திரன் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி திருவனந்தபுரம் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் மாநகராட்சி தற்காலிக பணியிடங்களை நிரப்ப சி.பி.எம் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பனிடம் பட்டியல் கேட்டு கடிதம் அனுப்பியதாக ஆர்யா ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பணிகள் அனைத்தும் ஆளும் சி.பி.எம் கட்சியினருக்கு மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்யா ராஜேந்திரனை ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஃபைல்கள் வடிவில் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 ஃபைல்கள் காணாமல்போனதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இருந்து மிகவும் முக்கியமான 3 ஃபைல்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து மியூசியம் போலீஸார் கடந்த மாதம் ரகசிய விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் 7 முக்கிய துறை சார்ந்த அலுவலகங்களிலும், 25 அரசு அலுவலகங்களிலும், 11 சோனல் அலுவலகங்களிலும் ஃபைல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை உள்ள ஃபைல்களை அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். அதில் 9 ஃபைல்கள் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் இருந்தும், ஸ்ரீகாரியத்தில் உள்ள சோனல் அலுவலகத்தில் இருந்து 5 ஃபைல்கள் உட்பட மொத்தம் 17 பைல்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பணி நியமன விவகாரத்தை கையில் எடுத்து போராடும் எதிர்க்கட்சிகள் இப்போது ஃபைல் காணாமல்போன பிரச்னைக்கும் சேர்த்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் பணி நியமனத்துக்கு கட்சி நிர்வாகிகள் பட்டியல் கேட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் நேற்று கிளப்பினார். இனி 8 நாள்கள் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மாநகராட்சி ஃபைல்கள் காணாமல் விவகாரத்தை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
from Latest News https://ift.tt/318ryG2
0 Comments