ஈரோடு: யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ரூ.75,000 அபராதம் - வனத்துறை நடவடிக்கையின் பின்னணி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு முன் இது யானைகள் சரணாலயமாக இருந்தது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் கணிசமான அளவில் யானைகள் வசிப்பதால் அவற்றின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.  சத்தியமங்கலம் பண்ணாரி செக்போஸ்ட்டில் இருந்து கர்நாடக வனப்பகுதியின் எல்லை வரையிலும் உள்ள யானைகளின் வழித்தடத்தின் வழியே மைசூர் - திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை-209 குறுக்கிடுகிறது. இந்தச் சாலையில் யானைகளின் முக்கிய வழித்தடமாக ஆசனூர், காரப்பள்ளம், புளிஞ்சூர், தாளவாடி, கோழிப்பாலம் போன்ற பகுதிகள் உள்ளன.

அபராதம் விதிக்கப்பட்ட டிரைவருடன், வனத்துறையினர்.

இந்த நெடுஞ்சாலையின் வழியே, ஈரோடு மாவட்டத்தின் மலைக்கிராமங்கள் அடங்கிய தாளவாடி தாலுகாவில் இருந்தும், கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரம், குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு, மைசூர் பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச் செல்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே, கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரியின் ஓட்டுநர்கள், கிளீனர்கள் இவ்வழியே குறுக்கிடும் காட்டு யானைகளுக்காக தனியே கரும்பு பண்டல்களை வைத்திருப்பார்கள். யானைகள் நிற்கும் இடத்தில் அவற்றை வீசிச் செல்வார்கள். இந்த கரும்புச் சுவைக்கு பழகிய காட்டுயானைகள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் காத்திருக்கும். இதனால், வனத்துறையினர் யானைகளுக்கு கரும்புகளை வீசிச் செல்லும் லாரி ஓட்டுநர்களை கடுமையாக எச்சரித்து வந்தனர்.

(கோப்பு படம்) கரும்பு லாரியை வழிமறிக்கும் காட்டுயானை

இதன்காரணமாக அண்மைக் காலமாக கரும்பு லாரி ஓட்டுநர்கள் கரும்பை வீசுவதில்லை. இருப்பினும், கரும்பு சுவைக்கு பழக்கப்பட்ட காட்டு யானைகள் காரப்பள்ளம், புளிஞ்சூர் செக்போஸ்ட் பகுதிகளில் காத்திருந்து, லாரிகளை வழிமறித்து கரும்பை கபளீகரம் செய்கின்றன. இவ்வாறு சாலையை மறிக்கும் யானைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துகின்றன. எனவே கரும்பு பண்டல்களை ரோட்டோரம் வீச வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தாளவாடி அருகே ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனச்சரகர் சிவகுமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மைசூரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த கர்நாடக  லாரி ஓட்டுநர் ஒருவர், லாரி மீது ஏறி கரும்பு கட்டுகளை எடுத்து ரோட்டோரம்  நின்றிருந்த காட்டு யானை நின்றிருந்த திசையில் வீசிக் கொண்டிருந்தார்.

இதைக்கண்ட வனத்துறையினர், அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய  போது, அவர் கர்நாடக மாநிலம், நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் என்பதும், அவர் மைசூருவில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனவிலங்குகளுக்கு முறையற்ற வகையில் உணவு வழங்கியதாக டிரைவர் சித்தராஜுக்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.

யானை

இதற்கு முன்பு வரை கரும்பை யானைகளுக்கு வீசிச் சென்ற லாரி ஓட்டுநர்களை எச்சரிக்கை மட்டுமே செய்து வந்த வனத்துறையினர் திடீரென ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது மற்ற ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

தாளவாடியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் வரும் கரும்பு லாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதியில் நிற்கும் யானைகளுக்காக கரும்பு பண்டல்களை வீசக் கூடாது. அவ்வாறு வீசும் வாகன ஓட்டுநர்களுக்கு உடனடி அபராதமும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்படும் என வனத் துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.



from Latest News https://ift.tt/12nfWzE

Post a Comment

0 Comments