ராகுல் யாத்திரையில் புதிய பாதை - திமுக கூட்டணிக்குள் ஐக்கியம் ஆகிறாரா கமல்ஹாசன்?!

ஜோடோ யாத்திரையில் பங்கேற்பு:

ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணக்குழு வரும் 24-ம் தேதி டெல்லி வருகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் அவரின் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கமலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் கமல் பங்கேற்கிறார். மறுபுறம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் இந்த கூட்டணியில் மநீமவும் இணைகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "கமல்ஹாசன் 2019-ம் ஆண்டு தேர்தலில் நின்றார். அப்போது 37 இடங்களில் போட்டி போட்டு, 3.78% ஓட்டு வாங்கினார். பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்ததால் நிற்கவில்லை. 2021-ம் ஆண்டில் 157 இடங்களின் தேர்தலை சந்தித்தார். 2.62% தான் ஓட்டு வாங்கினார். அவரே தோற்றுப்போய்விட்டார்.

பிரியன்

மக்களை சந்திக்கவில்லை:

அவர் கட்சி நடத்துவதில் தீவிரமாக இருப்பது போல் தெரியவில்லை. விக்ரம் வெற்றிக்கு பிறகு இந்தியன் - 2வில் நடித்து வருகிறார். பிக்பாஸில் பிஸியாக இருக்கிறார். எப்போதாவது கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டு எதாவது அறிக்கை விடுகிறார். மேலும் எங்களது கட்சிக்காரர்கள் பேசுவார்கள் என்று தெரிவித்து சென்று விடுகிறார்.

மக்களை சந்திக்காமல் இருக்கிறார். சங்கத்து ஆட்கள் இருக்கலாம். ஆனால் மக்கள் அவரோடு இருக்க வேண்டும். மன்றத்து ஆட்கள் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட தமிழகத்தில் 5 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். பிரச்சனைகளில் இருக்கும் அவர்களை சந்திக்க வேண்டமா?. கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளின் காரணமாக சந்திக்கவில்லை.

அப்போது மற்ற கட்சிகள் உதவி செய்தனர். ஆனால் நிலைமை சரியான பிறகும் கூட சந்திக்கவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள்?. மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது. இதற்காக ஏதேனும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?.

மின்கட்டணம்

பார்லிமென்டில் நுழையும் ஆசை:

தற்போது அவருடைய பார்வை திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகியவை நேர்கோட்டில் இருப்பது தான். இவர்களுக்கு பாஜக எதிர்ப்பு என்கிற கொள்கை இருக்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை முழுவதும் கமலால் பெற முடியாது. கொஞ்சம் பெற முடியும். பெரும்பான்மையான ஓட்டு திமுகவுக்கு தான் செல்லும்.

எனவே இந்த ஓட்டுக்களை பிரிப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. இதனால் திமுக அணியில் இணைத்து விட்டால் ஒன்று, இரண்டு என அவர்கள் கொடுக்கும் சீட்டை வாங்கி கொண்டு நாம் பார்லிமென்டில் நுழையலாம் என அவர் நினைக்கிறார். அதற்கான முதல்கட்ட நடவடிக்கை தான் இது. இதன் மூலம் திமுகவுக்கு பிரசாரத்திற்கு பாப்புலர் ஸ்டார் கிடைப்பார்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மநீம செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், "இதை கூட்டணிக்கான திட்டமாக சொல்ல முடியாது. ராகுல் காந்தியின் தரப்பில் இருந்து தான் அழைப்பு வந்தது. பொறுப்பான இந்திய குடிமகனை ஒரு இந்திய குடிமகனாக அழைக்கிறேன். எனவே டெல்லியில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே இருவருக்குமான புரிதல் இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம்

காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்து:

எங்களுக்கு தேசிய அளவிலான கட்சியில் பாஜகவை விட, தேசிய காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்து இருக்கிறது. மதசார்பற்ற தன்மை, ஒருங்கிணைத்த இந்தியாவுக்கான அக்கறை ஆகியவை காங்கிரஸிடம் அதிகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். நாளைக்கு ஆட்சியை கைப்பற்றக்கூடிய கட்சிகளில் தகுதியான கட்சி காங்கிரஸ். எனவே அது ஆட்சிக்கு வருவது தான் நல்லது என்று நினைக்கிறோம்.

ஆகவே நட்பு இருக்கும். 16 மாதங்களில் எங்கு போய் சேரும் என்று சொல்ல முடியாது. ஒரு கூட்டணி ஏற்படுவதற்கும், ஏற்படாமல் போவதற்கும் ஒரு சிறிய விஷயம் கூட காரணமாக போதுமானதாக இருக்கலாம். ஒருமுறை மதிமுக கூட்டணிக்கு கையெழுத்து போடும் இடத்திற்கு சென்ற பிறகு பின்வாங்கியது. எனவே இது காங்கிரஸுடனான எங்களது உறவுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பிற்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "இதை கூட்டணிக்குள் வருவார் என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. 2019-ம் ஆண்டில் ராகுல் காந்தியுடன் பல நேரங்களில் இருந்திருக்கிறார். ஒற்றுமை பயணம் புனிதமானது. அவரை இணைத்துக் கொள்வது தலைமையின் முடிவு. முதல்வர் இன்னும் பலமான கூட்டணி அமைக்கப்படும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். எனவே இன்னும் பலர் வரலாம். அது தலைமையின் முடிவு. இல்லை என்று கதவடைப்பு இல்லை" என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "கமல் பங்கேற்பதால் எதுவும் ஏற்படப்போவதில்லை. முதலில் கமல் இன்னும் அரசியலில் இருக்கிறாரா?. ராகுல் காந்தியும் அரசியலில் இல்லை. இருவரும் சேர்வதால் உன்னால் நான் கெட்டேன்.. என்னால் நீ கெட்டாய்... என்று இருக்க வேண்டியது தான்" என்கிறார்.



from Latest News https://ift.tt/1xhgfaO

Post a Comment

0 Comments