மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருக்கையை சேர்ந்த ரகு, காத்தவராயன் மற்றும் மேல்வாளையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் டி.இடையார் பகுதியில் கட்டட வேலை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் (12.12.2022) மாலை, வேலை முடிந்து 2 இருசக்கர வாகனத்தின் மூலம் மூவரும் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது, கொங்கராயனூர் - அருளவாடி இடையே தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்துள்ளனர்.
தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்களை தண்ணீரில் தள்ளிக்கொண்டு சென்றனராம். அப்போது எதிர்பாராத விதமாக மூவரும் தவறி விழுந்து ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் கூக்குரலை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கார்த்திகேயன் என்பவரை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், மீதம் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறையினர், ரகு, காத்தவராயன் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தொடர் மழையினால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அவர்களை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியினை பார்வையிட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி, கரையோர பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மோகன், இரண்டு இளைஞர்களை மீட்பதற்கான பணியை பார்வையிட்டுள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு ஆற்றை கடந்து வீடு திரும்பிய போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இதுவரை தேடும் பணி இரண்டு நேரமாக நீடித்து வருவது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/8pr4saW
0 Comments