காரின் அடியில் சிக்கி 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட பெண்; புத்தாண்டு இரவு டெல்லியில் நடந்த கோரம்!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, டெல்லியில் ஸ்கூட்டி ஒட்டிச் சென்ற பெண் காரில் இடிபட்டு, 12 கிலோ மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சுல்தான்பூரியில் நள்ளிரவு, 20 வயதுடைய அஞ்சலி என்ற பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க, அவரது வண்டி மீது கார் ஒன்று மோதியது. மோதிய காரின் அடியில் அப்பெண் சிக்கிக் கொள்ள, அந்த கார் 12 கிலோ மீட்டர் தூரம் வரை அவரை இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான வாகனம்

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, காரின் அடியில் பெண் இழுத்துச் செல்லப்பட்டதாக அதிகாலை 3.24 மணிக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அதிகாலை  4.11 மணிக்கு ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் இருப்பதாக தகவல் வர, அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த வண்டியின் எண்ணை அடையாளம் கண்ட அதிகாரிகள், 5 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கிரெடிட் கார்டு கலெக்ஷன் ஏஜென்ட், ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் இருந்ததாக போலீஸார் கூறுகின்றனர். 

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறுகையில், ``அந்த ஆண்கள், அவளை பாலியல் வன்கொடுமை செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவளுடைய ஆடைகள் முழுவதும் கிழிந்திருக்க வாய்ப்பில்லை. அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவள் நிர்வாணமாக இருந்திருக்கிறாள். இதில் முழு விசாரணையும், நீதியும் எனக்கு வேண்டும்’’ என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

டெல்லி காவல் துறை அதிகாரி ஹரேந்திர கே. சிங் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், ``கார் நம்பரை வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களின் கார் ஒரு ஸ்கூட்டியுடன் விபத்துக்குள்ளானதாகக் கூறினர். ஆனால் அவர்கள் தங்கள் காரோடு அந்தப் பெண்ணை பல கிலோ மீட்டர் இழுத்துச் சென்றதை அறிந்திருக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.  

இச்சம்பவம் குறித்து டெல்லி கவர்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இன்று காலை கன்ஜாவ்லா - சுல்தான்புரியில் நடந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்காக என்னுடைய தலை அவமானத்தால் குனிகிறது. குற்றவாளிகளின் உணர்வின்மை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. டெல்லி போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் கூறுகையில், ``காரில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மிகவும் ஆபத்தானது. முழு உண்மையும் வெளிவர வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

புத்தாண்டன்று பெண் விபத்துக்குள்ளாகி, 12 கிலோ மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



from Latest News https://ift.tt/hR30lEB

Post a Comment

0 Comments