தென்காசி: கணவன் கண்ணெதிரே குஜராத் புதுப்பெண் கடத்தல் - அதிர்ச்சி காட்சிகள்; 5 தனிப்படைகள் அமைப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வருபவர், குஜராத்தைச் சேர்ந்த நவீன் படேல். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவர் குடும்பம் செங்கோட்டை அருகே வசித்து வருகிறது. அவரின் மகள் கிருத்திகா படேல், அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

மணமகள் கடத்தல் சம்பவம் நடந்த இடம்

கிருத்திகா பள்ளியில் படிக்கும்போது, அவருடன் படித்த இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வினித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால், கடந்த ஆறு வருடங்களாக இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

கல்வி முடித்த வினித், சென்னையிலுள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அப்போதும், இருவரும் காதலைத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்த விவரம் கிருத்திகா குடும்பத்துக்குத் தெரியவந்ததும், எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் அவருக்கு குஜராத்தில் மணமகன் தேடியிருக்கின்றனர். அதனால் இருவரும் சில தினங்களுக்கு முன்பு, நாகர்கோவிலில் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடத்தல் சர்ச்சை

இதனை தொடர்ந்து வீட்டில் இருந்து கிருத்திகா காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதனால் இருவரும் கடந்த 25-ம் தேதி குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். அப்போது தங்களுக்குத் திருமணமான தகவலை காவல்நிலையத்தில் தெரிவித்த கிருத்திகா, தனது கணவருடன் செல்வதாகக் கூறிவிட்டதால் எழுத்துப்பூர்வமாக இருதரப்பினரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

கிருத்திகா தங்களை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவரின் பெற்றோர், காரில் சென்றுகொண்டிருந்த வினித்,கிருத்திகா-வை விரட்டியிருக்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த இருவரும் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த உறவினர் ஒருவரின் மரம் அறுவை மில்லுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு வந்த நவீன் பட்டேல் மற்றும் அவருடன் வந்தவர்கள், மணமகன் வினித்தை அடித்து உதைத்ததுடன், மணமகள் கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர்.

பெண்ணை வெளியே இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி

கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார் புதியதாக இருந்ததால் அதில், நம்பர் பிளேட் இருக்கவில்லை. இந்த கடத்தல் சம்பவம் நடந்ததும் மணமகன் வினித், குற்றாலம் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், அவரின் புகாருக்கு ரசீது கூட கொடுக்காத போலீஸார் அவரை அலைக்கழித்ததாக குற்றம்சாட்டுகின்றனர் வினித் உறவினர்கள். இந்த விவரம் உயரதிகாரிகளுக்குத் தெரியவந்த பின்னர், மறுநாள் (26-ம் தேதி) மாலை நவீன் பட்டேல் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மணமகள் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மண்மகள் கிருத்திகாவை கடத்திச் சென்ற கும்பல் ஜார்க்கண்ட், குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றிருக்கக் கூடும் என்ற தகவலின் அடிப்படையில்,5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்காசி பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/IAbMj5o

Post a Comment

0 Comments