கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியது. பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் முயன்றுவருகின்றனர். உக்ரைனின் டொனென்ஸ்ட் மாகாணத்தை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று ரஷ்ய படைகள் நிலை கொண்டிருந்த மகிவிகா நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில், சுமார் 400-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை ரஷ்ய படைகளும் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், அதில் 63 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் ஒரே தாக்குதலில் இத்தனை ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பது அதுவே முதல் முறையாகும். இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, ரஷ்யா தனது பதிலடியைத் தொடங்கிவிட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் உள்ள முக்கிய கட்டடங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவமும் ட்ரோன் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. உக்ரைனும் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள தகவலில் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ஒரே நாளில் மட்டும் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. ரஷ்யா இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் செய்யவில்லை.
இதற்கிடையில், பண்டைய ஜூலியன் நாட்காட்டியைப் பயன்படுத்தும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச், கிறிஸ்துமஸை ஜனவரி 7 அன்று கொண்டாடுகிறது.
உக்ரைனில் உள்ள சில கிறிஸ்தவர்களும் அதே தேதியில்தான் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். எனவே தற்காலிகமாவது போரை நிறுத்த வேண்டுமென, ரஷ்யாவின் ஆன்மிகத் தலைவர் கிரில்லின் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆன்மிகத் தலைவரின் கோரிக்கையை ஏற்ற, ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
from Latest News https://ift.tt/IJCuPgv
0 Comments