``முல்லைப் பெரியாறு அணை உரிமைகளை தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுக்காது" - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

தென் தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக், அவர்களின் 182 ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. பென்னிகுவிக்கை கடவுளாக போற்றும் தேனி மாவட்ட மக்கள் நினைவு மண்டப வளாகத்தின் வெளியே பொங்கல் வைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

முல்லைப்பெரியாறு அணை

அந்த வகையில் காலை முதலே விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் வரிசையாக வந்து மரியாதை செலுத்தினர். 

தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார், கலெக்டர் முரளீதரன் ஆகியோர் பென்னிகுவிக் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ஐ.பெரியசாமி

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமி, ``தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது. ​​உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நிலவும் பிரச்னையை நம்முடன் நட்புடன் இருக்கும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். முல்லைப் அணையின் தமிழக உரிமையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்காது. தேனி புதிய பேருந்து நிலையத்தில் பென்னிகுவிக் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 



from Latest News https://ift.tt/nUzuoXH

Post a Comment

0 Comments