பாம்புடன் செல்ஃபி: மரணத்தில் முடிந்த விளையாட்டு - ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கடையிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மணிகண்டா ரெட்டி, பேருந்து நிலையம் அருகே ஒருவர் பாம்பை வைத்து வித்தைக் காட்டிக்கொண்டு இருந்தைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை பிறந்திருக்கிறது. பாம்பு வைத்திருந்த நபரிடம் சென்ற மணிகண்டா ரெட்டி, பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அந்நபர் மறுப்பு தெரிவித்தும் மணிகண்டா ரெட்டி வற்புறுத்தியிருக்கிறார். மேலும், பணம் தருவதாக கூறி தன்னுடைய கழுத்தில் பாம்பை சுற்றிவிட வேண்டும் என கேட்டிருக்கிறார். அந்நபரும், பணம் வருகிறதே என்ற எண்ணத்தில் சம்மதம் தெரிவித்து, மணிகண்டா ரெட்டியின் கழுத்தில் பாம்பை சுற்றி விட்டார். மணிகண்டா ரெட்டியும் பாம்புடன் செல்பி எடுத்து, விளையாடியிருக்கிறார். அதன் பின்னர் தனது கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்துவிட்டது.

பாம்பு

இதனால் பதறிய மணிகண்டா ரெட்டி பாம்பை கழுத்திலிருந்து வீசி எறிந்துவிட்டு வலியால் அலறி துடித்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணிகண்டா ரெட்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்துகோல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News https://ift.tt/ZfdOVJ4

Post a Comment

0 Comments