தீர்மானம் நிறைவேற்றம்:
"தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மறுபுறம் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, "இத்திட்டம் கடல் மற்றும் கடலோர சூழல் அமைவைக் கடுமையாக பாதிக்கும் தன்மையுடையது. குறிப்பாக மன்னார் வளைகுடா உயிர் மண்டலக் காப்பகம் மற்றும் பவளத்திட்டுகளை பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என தெரிவித்திருக்கிறது, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. இதுபோல் அரசியல், பொருளாதாரம், வழக்கு, பன்னாட்டு உறவு, சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் என இடியாப்ப சிக்கலில் சிக்கி பல ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கப்பட்டு வரும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன தான் பிரச்னை?
60% சரக்கு கப்பல்கள் வந்து விடும்:
தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், "சுற்றுச்சூழல், நம்பிக்கை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். ஏற்கெனவே, வட அமெரிக்காவையும் - தென் அமெரிக்காவையும் இணைக்கக்கூடிய 'பனாமா கால்வாய்' மற்றும் ஐரோப்பாவையும், ஆசிய நாடுகளையும் இணைக்கக்கூடிய 'சூயஸ் கால்வாய்' மனிதனால் கட்டப்பட்டதுதான். இந்த திட்டங்கள் தொடங்கப்பட்ட போதும், இவ்வாறு தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு உருவாக்கிவிட முடியாது. சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 424 கடல் மைல் தூரம் குறையும் என்பதால் ஏறத்தாழ 30 மணி நேர பயணத்தை குறைக்க முடியும். எரிபொருள் அதிக அளவில் மிச்சமாவதோடு சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். அதிகமாக கப்பல்கள் வந்து செல்லும் போது ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது 300 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்டது. இதற்குள் 60% சரக்கு கப்பல்கள் வந்து விடும்" என்றார்.
அரசியல் லாபத்திற்காக...
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், "முன்னதாக ரூ. 2,427 கோடி செலவில் 02.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆதம் பாலம் மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவதற்கு 17.09.2007 ல் தடை விதித்தது.
அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் இத்தடையை இந்துத்துவ பிரிவினை சக்திகளும், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தத் தொடங்கி சேது கால்வாய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்கள் எதிர்த்ததற்காகவே இத்திட்டத்தை நிறைநிறைவேற்றியே தீர வேண்டும் என்கிற வழியில் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முடிவெடுத்திருப்பது வேதனைக்குரியது.
`4,223 வகை உயிரினங்கள் வாழ்கிறது...'
மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 167 கி.மீ தொலைவிற்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதில் 89 கி.மீ. நீளத்திற்கு 12 மீட்டர் ஆழத்திற்கு கடல் தூர்வாரப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்திருக்கும் 21 தீவுகளை உள்ளடக்கிய 10,500 சதுர கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பு மன்னார் வளைகுடா உயிர் மண்டலக் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உலக அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இப்பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவளங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பல சுனைப்புழுக்கள், 103 வகை முட்தோலிகள், கடல் சங்குகள், பங்குனி ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற 4,223 வகை உயிரினங்கள் வாழும் உயிர்ப்பன்மயம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
அழிந்துவரும் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும், ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும் இந்த ஆவுளியா கடல் பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு 15.02.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆவுளியா உயிர் மண்டலக் காப்பகத்தை 5 கோடி செலவில் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியினை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து விட்டு மறுபுறம் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் வணிக நோக்கிற்காக அப்பகுதியின் உயிர் பன்மயத்தை அழிக்க நினைப்பது எப்படி சரியாகும்?.
பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட இத்திட்டம் பலனளிக்காது என கடல் போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேது கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட 30,000 டன்னுக்கு உட்பட்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பொதுவாகவவே மேற்குக் கடற்கரைகளுக்கிடையே குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கப்பல்கள் செல்கின்றன.
அப்படி 30,000 டன்னுக்கு குறைவான கப்பல்கள் சேது கால்வாயில் சென்றாலும் சுங்கவரி, பைலட் கப்பல் வாடகை என செலவு செய்ய வேண்டும். மேலும் சேது கால்வாயில் செல்லும் போது கப்பல்கள் தங்கள் வேகத்தை குறைத்து பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் எரிபொருள் செலவாகும். சூயஸ், பனாமா போன்ற கால்வாய்கள் பல வார பயணத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தி கொடுக்கின்றன.
மேலும் அவை நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட கால்வாய்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், சேது கால்வாய் 30 மணி நேரத்தையும், 424 நாட்டிகல் மைல் தூரத்தையும் மட்டுமே மிச்சப்படுத்துவதால் கப்பல் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் இருக்காது.
சேது கால்வாய் திட்டம் வந்தால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையில் உள்ள 140 மீனவ கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். சேதுசமுத்திர திட்டத்தினால் கடலை ஆழப்படுத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும், துறைமுகம் அமைக்கும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும் தான் நன்மையே தவிர, தங்களின் தற்சார்பு பொருளாதாரத்தில் இருந்து கூலி தொழிலாளியாக மாற்றப்பட போகும் லட்சகணக்கான மீனவர்களுக்கு இது வளர்ச்சி இல்லை வீழ்ச்சி" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "சேது சமுத்திர திட்டமானது ராமர் பாலத்தில் உறுதியாக நடைபெற முடியாது, கூடாது. அதுதான் நீதிமன்றத்தினாலும் உத்தரவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் ராமர் பாலம் இருக்கும் இடத்தில் பெரிய கப்பல்கள் வர முடியாது. எனவே இந்த திட்டம் ஒரு பலனையும் தராது. சிறிய துறைமுகங்களுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதெல்லாம் கிடையாது.
மேலும் கடல் உயிரினங்களுக்கு இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆதாரபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமது நாட்டிற்கு இந்த திட்டம் வரும் பொழுது வேலைவாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் பெருகும், சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கும் என்பதை மனதில் கொண்டு அதற்கு மாற்று வழிகள் இருக்கிறதா என்று மத்திய அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இறை நம்பிக்கை இல்லாத இந்து விரோத சக்திகள், தீய சக்திகள் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்" என்றார்.
from Latest News https://ift.tt/njgBNYk
0 Comments