டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன. தமிழகத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் பல கருத்துகள் மாநில அரசின் நிலைப்பாடுக்கு எதிராகவே உள்ளன. ஆளுநர் பேசுகிற பல கருத்துகள் தி.மு.க அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிரானவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் இயல்புக்கு மாறாக அவர் பேசிவருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை, பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுவைத்திருக்கும் ஆளுநர் ரவியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல’ என்று ஆளுநர் ரவி பேசிய கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பல்கலைகழக துணை வேந்தர்களை தனியே சந்தித்ததும், சமீபத்தில் ஆளுநர் மாளிகையின் நிகழ்வில், தமிழ்நாடு என அழைப்பதை விட தமிழகம் என அழைப்பது தான் சரியாக இருக்கும் என பேசியதும் பூதாகரமாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது தமிழில் ஆளுநர் உரையாற்றத் தொடங்கினார். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், 'தமிழ்நாடு எங்கள் நாடு" என்ற முழக்கத்தை முன் வைத்து, ஆளுநரை பேரவையில் இருந்து வெளியேறக்கோரி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல், தனது உரையை தமிழில் தொடங்கினார்.
ஆளுநர் தனது உரையில், "அனைவருக்கும் வணக்கம். 2023-ம் ஆண்டின் முதல் சட்டமன்றத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். `வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" எனப் பேச்சைத் தொடர்ந்தார்.
ஆனால், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதை கவனிக்காமல் தனது உரையைத் தொடர்ந்த ஆளுநர் தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கி பேசினார். மேலும், ``நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. தொழிற்துறையில் தற்காலத்துக்கு ஏற்றதுபோல ஐ.ஐ.டி-களில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. காலை உணவுத் திட்டத்தால் 1.14 லட்சம் மாணவர்களுக்கு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் போதைப் பொருள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புத்தொழில் திட்டத்தில் ரூ.30 கோடியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகச் சிறப்பான முன்னெடுப்பு.
பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். மதுரையில் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ 600 கோடியில் அமைக்கபட்டு வருகிறது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். கீழடி அருங்காட்சியகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வளர்ந்த நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என உரையாற்றி முடித்திருக்கிறார்.
3-வது பத்தியில் இடம்பெற்றிருந்த "திராவிட மாடல்" என்னும் வார்த்தையை ஆளுநர் வாசிக்கவில்லை.
ஆளுநர் உரையில் இரண்டு முறை "திராவிட மாடல்" எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இருமுறையும் அதை வாசிக்கவில்லை.
from Latest News https://ift.tt/smSOf0p
0 Comments