காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்துவருகிறார். இவர் தொழிலாளர்களின் பி.எப் பணத்தைச் சரிவர அவர்களின் கணக்கில் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அஞ்சூரை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பனிடம் கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் பாஸ்கரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் இந்த விவரம் குறித்து தங்களின் நண்பரான பிரசன்ன பாலாஜி என்பவரிடம் கூறியுள்ளனர். `பாஸ்கரிடம் நிறையப் பணம் இருக்கிறது சரியாகத் திட்டமிடல் அவரிடமிருந்து பணம் பறிக்கலாம்’ என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இவர்களின் திட்டத்துக்குப் பிரசன்ன பாலாஜியின் காதலியான வடகடம்பாடியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற இளம் பெண்ணை பயன்படுத்தியிருக்கிறார்கள். ரஞ்சிதாவிடம் தங்களின் திட்டத்தைச் சொல்லி, பாஸ்கரிடம் நெருங்கிப் பழகக் கூறியுள்ளனர். அதன்படியே, ரஞ்சிதாவும் பாஸ்கரிடம், `சமூக வலைதள பக்கங்களில் உங்களை பார்த்தேன்’ என்று சொல்லி பேசத் தொடங்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பழகத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், இருவரும் நேரில் சந்தித்து நெருங்கிப் பேசிப் பழக ஆரம்பித்துள்ளனர்.
இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி 27-ம் தேதி, பாஸ்கரனைத் தொடர்புகொண்ட ரஞ்சிதா தான், சென்னேரி பகுதியில் காத்திருக்கின்றேன் வந்து அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பாஸ்கரனும் ரஞ்சிதாவை தனது பைக்கில் வந்து அழைத்துக்கொண்டு சிறுங்குன்றம் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி மூவரும் அவர்கள் இருவரையும் மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்கள்.
பாஸ்கரனின் கூகுள்-பேவிலிருந்து 28 ஆயிரம் ரூபாய் பெற்றவர்கள், இருவரின் செல்போனை பறித்துக்கொண்டு ரஞ்சிதாவை தெரியாதது போலவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் தனியாக இருந்ததை செல்போனில் படம் பிடித்துக்கொண்டு, இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் புகைப்படத்தை வெளியே விட்டுவிடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற பாஸ்கர் கொள்ளை சம்பவம் குறித்து திருப்போரூர் பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, வழிப்பறி நடந்த தினம் ரஞ்சிதாவும் உடனிருந்ததை அறிந்த போலீஸார் ரஞ்சிதாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். ரஞ்சிதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, கூகுள் பேவுக்கு பணம் அனுப்பிய செல்போன் எண் ரஞ்சிதாவின் செல்போனில் இருந்திருக்கிறது. இதனையடுத்து, ரஞ்சிதாவிடம் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
ஒருகட்டத்தில், ரஞ்சிதாவும் "நாங்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்துதான் பாஸ்கரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தோம்" என்பதை போலீஸில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா நால்வரையும் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சினிமாவில் வருவது போல, பெண்ணை நெருங்கப் பழகிவிட்டு தொழிலதிபரிடம் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/U0epmjJ
0 Comments