2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுளை நெருங்கும் நிலையிலும் அதற்கான அறிவிப்பை திமுக அரசு வெளியிடாமல் இருந்தது விமர்சனத்துள்ளாக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரி அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடியாக அமைந்தது. இந்த நிலையில், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரையின்போது வெளியாகிய இந்த அறிவிப்பு, தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஏன் இத்தனை தாமதம் என்னும் கேள்வி எழாமல் இல்லை.
இதற்கு கூட்டத்திலேயே பதிலளித்த ஸ்டாலின், ``ஆட்சிக்கு வந்த உடன் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் பெண்கள் பலர் பயனடைந்துள்ளனர். தற்போது வாக்குறுதியாக அளித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டமும் வரும் மார்ச் மாதம் தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெறும்” என்றார். மேலும், ``ஆட்சி அமைக்கும் போதே, நிதிநிலை சரியாக இருந்திருந்தால், அப்போதே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும்” எனவும் கூறினார்.
சட்டசபை கூட்டத்திற்கு முன்பு கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது மார்ச் மாதம் மகளிர் தினத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், அதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்திற்கு காரணம் நிதிநிலை எனச் சொன்னாலும், `யாருக்கு இந்தத் திட்டம் சென்றடைய வேண்டும்’ என்பதை வரையறை செய்வதில் ஏற்பட்ட தாமதமும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 5 வகையான ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அது PHHRICE, PHHA, NPHH,NPHHS,NPHHNC ஆகிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுக்கிறது. அதில், தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் அரிசி, சக்கரை மற்றும் அடிப்படையான பொருட்கள் அனைத்தையும் வாங்கும் அட்டைதாரர்கள் (PHHRICE) மற்றும் மாதம் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரகளுக்கு (PHHA) மட்டும் மாதம் உதவித்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோராயமாக, தமிழகத்தில் இந்த இருவகை அட்டைதார்கள் 95,64,540 இருக்கின்றனர். இதிலும், பிற நலத்திட்டங்களில் பயனடையும் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை தவிர்க்கப்படலாம் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், பல நலத்திட்டங்கள் அமலில் உள்ளது. குறிப்பாக, முதியோர் உதவித்தொகை உட்பட குடும்பம் தோறும் ஏதாவது ஒரு நலத்திட்டங்களால் பலன் பெற்றவர்களாகவே இருக்கின்றனர். எனவே, அப்படி எந்த நலத்திட்டங்களை பெறாத குடும்பம், ஆண்டு வருமானம் அரசு நிர்ணியக்கும் தொகைக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் வாயிலாக நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அதற்கான ஆய்வுகள் இத்தனை நாள்களாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்ட தரவுகள் யார் இந்தத் திட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதி செலுத்தப்படும். ஏற்கனவே, தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதாலும், தகுதி வாய்ந்தவர்கள் இதில் பலனடைய வேண்டும் என்னும் நோக்கத்திலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கான அறிவப்பு நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். அதன்பின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல் திட்டம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
from Tamilnadu News https://ift.tt/JZmXahU
0 Comments