டெல்லியில் மதுபானக்கொள்கையை உருவாக்கி அதனை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க-வும், சி.பி.ஐ-யும் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே இந்தப் புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஜெயின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்தது. மதுபானக்கொள்கையில் நடந்த ஊழலில் கிடைத்தப் பணத்தைத்தான் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி மணீஷ் சிசோசியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து நேற்று காலையில் ஊர்வலமாக சி.பி.ஐ அலுவலகத்துக்கு சிசோடியா சென்றார். செல்லும்போதே, ``நான் 7-8 மாதங்களுக்குச் சிறைக்குச் செல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே சென்றார். காலை 11 மணிக்கு சி.பி.ஐ அலுவலகத்துக்கு சிசோடியா வந்தார். அவரிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை திருப்தியளிக்காத காரணத்தால், அவரைக் கைதுசெய்தனர். கைதுக்குப் பிறகு சி.பி.ஐ தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ``சிசோடியா திருப்திகரமாக பதிலளிக்கவில்லை. மதுபானக்கொள்கையை உருவாக்கி அதனை அமல்படுத்தியது, டெண்டருக்குப் பின்பும் தனியாருக்குச் சாதகமாக நடந்து கொண்டதற்காக மணீஷ் சிசோடியா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மணீஷ் சிசோடியாவிடம் மதுபானக்கொள்கை, ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருப்பவர்களுடன் உள்ள தொடர்பு, போன்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மணீஷ் சிசோடியா விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு மழுப்பும் விதமாகவே பதிலளித்தார். சாட்சிகளை எதிரில் நிறுத்திக் கேள்வி கேட்டபோதும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதிகாரிகள் கேட்ட முக்கியமான விளக்கங்களுக்கு பதிலளிக்கவில்லை. எனவே காவலில் வைத்து விசாரிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிசோடியா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். இதையடுத்து அவர் சி.பி.ஐ காவலுக்கு மாற்றப்படவிருக்கிறார். டெல்லி ஆம் ஆத்மி அரசில் நிதி, கலால்வரித்துறை, கல்வி உட்பட பல இலாகாக்களை கவனித்து வந்தார். விசாரணையில் மதுபானக்கொள்கையில் இடம்பெற்றிருக்கும் 6 அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சிசோசியா சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சிசோடியா கைது குறித்து ஆம் ஆத்மி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சிசோடியா டெல்லி கல்விக்கொள்கையின் அடையாளம். அவரது கைது டெல்லி நிர்வாகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அவரது (சிசோடியா) வீட்டிலிருந்து அல்லது வங்கிக் கணக்கிலிருந்து உங்களுக்கு (பா.ஜ.க) எதுவும் கிடைக்கவில்லை. சிசோடியாமீதான குற்றச்சாட்டை அவர்களால் நிரூபிக்கவும் முடியாது" என்று தெரிவித்திருக்கிறது.
இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ``சிசோடியா ஓர் அப்பாவி. அவரது கைது ஒரு மோசமான அரசியலாகும். சிசோடியா கைதால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். மக்கள் இதற்கு பதில் கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார். சிசோடியாவின் கைதை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அந்தக் கட்சி தெரிவித்திருக்கிறது.
2021-ம் ஆண்டு டெல்லி அரசு உருவாக்கிய மதுபானக்கொள்கையில் தனியார் நிறுவனங்களில் பங்கு இருந்ததாகவும், மதுபான வியாபாரிகள் ரூ.100 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. மதுபான வியாபாரிகளுக்கு மது விற்பனையில் 12 சதவிகிதம் லாபம் கொடுக்கப்பட்டதாகவும், இடைத்தரகரர்கள் மூலம் அதில் 6 சதவிகிதம் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகளுக்குச் சென்றதாகவும் சி.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அமலாக்கப் பிரிவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
from Tamilnadu News https://ift.tt/zyntuv8
0 Comments