கடந்த 1-ம் தேதி மத்திய பட்ஜெட்- 2023 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, அதன்மீதான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, `இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்' என பல தலைவர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாகப் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ``இந்த பட்ஜெட் ஏழைகள்மீது அமைதியாக தொடுக்கப்பட்ட போர்" எனக் கூறினார். அதில் அவர் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, பட்ஜெட் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ``ஒட்டுமொத்தமாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், ஆரம்பக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, கல்விக்கு 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறினார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்து 9 ஆண்டுகளாகிய பின்பும், 3 சதவிகிதத்துக்கு மேல் நிதி ஒதுக்கப்படவில்லை" என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தர். மேலும், ``இந்த பட்ஜெட் நிச்சயம் ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும்" என்றார்.
100 நாள் வேலைத் திட்டம் குறைக்கப்பட்ட நிதி!
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த இந்தத் திட்டம் கிராமப்புற வேலை வாய்ப்பினை உறுதி செய்து, அவர்கள் முன்னேறுவதில் முக்கிய பங்காற்றிய ஒரு திட்டமாக இருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு ஒதுக்கியிருக்கும் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. இதில் அதிகமாகப் பணியாற்றுபவர்கள் பெண்கள். கிட்டத்தட்ட 75-80% பெண்கள் இதில் ஈடுபடுகின்றனர். கொரோனா தாக்கத்திலிருந்து மீளாமல் இருக்கும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டால், அவர்களின் வாழ்க்கை நிலை மேலும் மோசமாகும். 2021-2022-ம் ஆண்டு, இந்தத் திட்டத்துக்கு 98,467 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அது அடுத்த ஆண்டில் 2022-2023-ம் ஆண்டில் 73,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அது மேலும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 60,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே பணி நடக்கும் நிலை உருவாகும். ஏற்கெனவே மிக சொற்ப அளவில் கிடைக்கும் வேலை நாள்கள், மேலும் குறைக்கப்பட்டால், கிராமப்புற மக்களின் வாழ்வாதார நிலை மோசமாகிவிடும்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா?!
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கல்விக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது சரியான நடவடிக்கை என்றாலும், பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழ்நதைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டு 9.37 சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.12,800 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 11,600 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் அதிகரிக்கும் சுழலில் இந்தத் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தேசிய கல்விக்கொள்கையில் குழந்தைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த மதிய உணவு நிதி குறைப்பு அவர்கள் கல்வியைப் பாதிக்கும் என்பதே கல்வியாளர்களின் கவலையாக இருக்கிறது.
அதேபோல் 1,245 பள்ளிக்கூடங்கள் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு ரூ.8,364 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான்) அடிப்படையில் இந்தியாவில் 14 லட்சம் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு 37,453 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிகளுக்கு வழங்கியிருக்கும் நிதியை அதிகரித்து வழங்க அரசுக்கு முயன்றிருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. மேலும், மத்திய அரசின் பிரதான போஷன் திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டின் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2022-2023-ம் ஆண்டு 12,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அது 11,600 கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். ``அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தித் தர, பள்ளிக்கூடங்களில் பாடத்துக்கு ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் இருப்பவர்களை வைத்து எப்படி சமாளிக்கலாம் என்னும் நோக்கத்தில் மட்டுமே தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், கோத்தாரி கமிஷன் வலியுறுத்தியது போல், கல்விக்கு 6 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை 3 சதவிகிகம் நிதிகூட ஒதுக்கப்படவில்லை. கடந்த ஆண்டை விட இந்த நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், சதவிகிதத்தில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் 2.9 சதவிகிதம் ஒதுக்கீடு என்னும் தேக்கத்தில்தான் இருக்கிறது கல்வியின் நிதி ஒதுக்கீடு.
அதேபோல், மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல், ஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும். ஆனால், அதில் தற்போது வரை ராணுவத்துக்கு மட்டுமே ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது. ஆனால், நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கல்வியில் அவர்கள் உயர்ந்திருக்க வேண்டும். இந்தியாவில் அந்த நிலையை அடைய, தற்போது ஒதுக்கியிருப்பதைவிட இரட்டிப்பாக ஒதுக்கீடு செய்தாலும் அது போதாது.
மூன்று வேளையிலும் உணவு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கிறோம். ஆனால், அவர்கள் ஒரு வேளைக்கான உணவையும் குறைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இது மாணவர்களுக்கு உளவியல்ரீதியாகப் பிரச்னைகளை ஏற்படுத்தும். கொரோனா காலத்தில் பெற்றோர்கள் வறுமையில் இருக்கிறார்கள். இப்போது இந்த நிதியைக் குறைத்திருப்பது தவறான நடவடிக்கை. குழந்தைகளுக்கு இது மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய கல்விக்கொள்கை, முற்றிலுமாக கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைக் கொண்டது. எனவே கல்வி ஒதுக்கீடுக்கு அவர்கள் கவலை கொள்ளவில்லை. காரணம், தனியாரிடம் ஒப்படைத்தால், தொண்டு நிறுவனங்கள் அதன் செலவுகளைப் பார்த்துக் கொள்ளும் என்னும் கண்ணோட்டத்தில் இவர்கள் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை குறைத்திருக்கிறார்கள். மக்கள் வரி செலுத்துவதற்கு, அவர்களுக்கான நிதியை திட்டத்துக்காக ஒதுக்காமல், கல்விக்காக தனியார் நிறுவனங்களிடம் கையேந்த வேண்டிய சூழலை அரசு ஏற்படுத்துகிறது. எனவே, நாம் வாழ வேண்டுமா... இல்லை கண்ணியமாக வாழ வேண்டுமா... என்பதை நாம் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
from Tamilnadu News https://ift.tt/xc1gInN
0 Comments