லாட்டரியில் வென்ற பணத்தில் முன்னாள் மனைவிக்கு வீடு; மனைவியிடம் மறைத்த கணவருக்கு அதிரடி உத்தரவு!

சீனாவில், லாட்டரியில் வென்ற ரூ.12 கோடியைப் பற்றி மனைவியிடமிருந்து மறைத்து, தன்னுடைய முன்னாள் மனைவிக்கு வீடு வாங்கிக் கொடுக்க உதவிய நபருக்கு நீதிமன்றம் ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

முன்னதாக, Zhou என்ற குடும்பப் பெயர் கொண்ட ஒரு நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் வென்றிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய். இதில் வருமானவரி போக அந்த நபருக்கு சுமார் 10 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

லாட்டரி பணம்

இந்தப் பணம் அவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டபோது, அதிலிருந்து ரூ.2.42 கோடியை தன்னுடைய சகோதரிக்கு அவர் அனுப்பினார். அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து, தன்னுடைய முன்னாள் மனைவிக்கு ரூ.84.93 லட்சத்தை, வீடு வாங்குவதற்காகக் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் இந்த விஷயங்களையெல்லாம் அவர், தன்னுடைய மனைவியிடமிருந்து மறைத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இந்த விஷயம் அவரின் மனைவிக்குத் தெரியவர, மனைவியோ விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றார். மேலும் அவரின் மனைவி நீதிமன்றத்தில், சகோதரி, முன்னாள் மனைவி என தன்னிடமிருந்து மறைத்த சுமார் ரூ.3.27 கோடியில் மூன்றில் இரண்டு பங்கு தனக்கு அவர் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

நீதிமன்றம் உத்தரவு

அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``லாட்டரியில் வென்ற பணத்தில் Zhou தன்னுடைய சகோதரி, முன்னாள் மனைவிக்கு கொடுத்த பணம் என்பது தம்பதிக்கு பொதுவான சொத்து. எனவே மறைத்த பணத்தில் 60 சதவிகிதத்தை Zhou தன்னுடைய மனைவிக்குத் தர வேண்டும்" என உத்தரவிட்டது.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, இணையதளவாசிகள் பலரும் இதற்கு கமென்ட் செய்துவருகின்றனர். அதிலும் ஒருவர், `நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இது அமைந்துவிட்டது' என கமென்ட் செய்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/bCHlYpo

Post a Comment

0 Comments