தமிழக- கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன் பாலாறு இணைகிறது. இங்கிருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் இருக்கின்றன. மலையோர தமிழக கிராமங்களிலிருந்து செல்லும் சிலர், பாலாற்றை பரிசலில் கடந்து சென்று கர்நாடக வனப்பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சேலம் மேட்டூரை அடுத்த கோவிந்தபாடி, தர்மபுரி மாவட்டம், ஏமனூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பரிசல்களில் சென்றிருக்கின்றனர். கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே மீன் பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். அதில் சிலர் தப்பி மேட்டூர் பகுதி கிராமங்களுக்கு வந்துவிட்டனர்.
ஆனால், மேட்டூர் கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த கார வடையான் என்கிற ராஜா மட்டும் காணவில்லை. இதனால் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியிருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ராஜாவின் ஆற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இந்தத் தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், அவர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வேட்டைக்குச் சென்ற தமிழக மீனவர்கள்மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி என்பவர் பலியானார். அப்போது வெகுண்டெழுந்த கிராம மக்கள் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடக வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாலாற்றிலுள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடிக்கு கர்நாடகா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கர்நாடக வனத்துறையைக் கண்டித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கைதுசெய்யப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவர் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மீன் பிடிக்கச் சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/DxSyOuk
0 Comments