உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், கடந்த ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்யப் பரிந்துரை வழங்கியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கெளரியும் ஒருவர். இவர் பாஜக-வின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்திருக்கிறார். அப்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரசாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களைச் செய்ததாக இவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இவரை நீதிபதியாக நியமிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் கொலீஜியத்திற்கு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மனு அளித்தனர். மேலும், இவருக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், அவர் நீதிபதியாகும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. அவர் ட்வீட்டர் பக்கத்தில், `இந்திய அரசியலைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி , அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு கூடுதல் நீதிபதிகளாக பின்வரும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என பதிவிட்டிருந்தார். அதில் விக்டோரியா கௌரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இவருக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை, அடுத்த திங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஆனால், இதன் அவசரம் கருதி விரைவில் விசாரிக்க வேண்டும் என்னும் வாதத்தை மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் முன்வைத்தார். இதன் காரணமாக இதன் விசாரணை இன்று பட்டியலிடப்பட்டது.
காலை 10.35 மணிக்கு விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்க இருக்கும் நிலையில், வழக்கு விசாரணையானது காலை 9.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கானது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட இருந்தது. பின்னர் இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, காலை 10.30 மணிக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ``விக்டோரியா கௌரி சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் என்ற காரணத்தினாலே அவரின் நியமனத்தை எதிர்க்கிறோம்” என்று வாதிட்டனர்
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `நீதிபதிகள் நியமனம்’ தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். ``அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே கொலீஜியம் நீதிபதியாக ஒருவரை பரிந்துரைக்கும். நீதிபதிகளை அவர்களின் சமூக வலைதள பதிவு அடிப்படையில் பின் தொடர முடியாது. அரசியல் பின்பலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது” என்றனர்.
நீதிபதி கவாய், ``நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால் நீதி வழங்கும் போது சார்பு இருக்கக்கூடாது. உத்தரவு, தீர்ப்பு வழங்கும்போது அரசியல் பார்வையை கொண்டு வந்ததில்லை. இது விக்டோரியா கெளரிக்கும் பொருந்தும் தானே” என்றார்.
மேலும் நீதிபதிகள். ``ஒருவரை நீதிபதியாக நியமிக்கும் போது, கொலீஜியம் குறிப்பிட்ட நீதிமன்ற நீதிபதிகளிடன் கருத்துகளை கேட்கும். மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? மேலும், நீதிபதிகள் சொல்லும் கருத்துகளை கொலீஜியம் ஆராய்யும். அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே கொலீஜியம் நீதிபதியாக நியமிக்க ஒருவரை பரிந்துரைக்கும். இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விக்டோரியா கௌரி நிரந்தர நீதிபதியாக நியமிக்கபடும் முன் ஓராண்டுக்கு அவரின் செயல்கள்பாடுகள் பரிசீலிக்கப்படும்” என விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனிடையே, சென்னையில் காலை 10.35 மணிக்கு விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
from Latest News https://ift.tt/8LoQ0Nt
0 Comments