தமிழக மீனவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை - தடுத்து நிறுத்துமா இந்திய அரசு?!

கச்சத்தீவு திருவிழா நெருங்கிவரும் நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இருவேறு கொடூரமான தாக்குதல் சம்பவங்களை நடுக்கடலில் வைத்து அரங்கேற்றியிருக்கிறார்கள் இலங்கை கடற்படையினர். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய அதேநாளில் மீண்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கடற்படை தளம்

அதிகரித்த தாக்குதல்:

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர். சரியாக பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 6 தமிழக மீனவர்களையும் இரும்பு கம்பிகளால் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.

மேலும், மீனவர்களின் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகள், இன்ஜின், இரண்டு பேட்டரிகள், தூண்டில் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் மீன்பிடியை நிறுத்திவிட்டு, அவசரமாக கரை திரும்பியிருக்கின்றனர். அவர்களை மீட்டு சக மீனவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார், தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது கொலை மிரட்டல், கொள்ளை, தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள்

முதலமைச்சர் கடிதம்:

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அதில், ``தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள் மீண்டும் தற்போது (பிப்ரவரி 23-ம் தேதி) தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறிவருகிறது. பாக் ஜலசந்தி பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், தமிழ்நாட்டு மீனவர்களைத்தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்திவருகிறது. மேலும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்திவருகிறது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதர வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!" என வலியுறுத்தியிருந்தார்.

ஸ்டாலின்

மீண்டும் தாக்குதல்:

இந்தநிலையில், மீண்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். குறிப்பாக கடந்த 24-ம் தேதி காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்குத் தென்கிழக்கு வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றனர். பின்னர், மீனவர்களின் படகில் ஏறிக்குதித்த ஐந்துக்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை அதிகாதிரிகள் மீனவர்களை இரும்பு பைப்பைக் கொண்டு கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும், படகில் இருந்த 7 மீனவர்களை நடுக்கடலில் தள்ளி தத்தளிக்கவிட்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள், வாக்கி டாக்கி, மீனவர்கள் அணிந்திருந்த செயின்கள், கையில் வைத்திருந்த செல்போன்கள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் திருடிச்சென்றிருக்கின்றனர். அதன்பிறகு, பலத்த காயங்களுடன் கரைதிரும்பிய மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை கொலைவெறி தாக்குதல்

கண்டனம்:

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் மற்றும் மீனவர்கள் சங்கத் தரப்பினர் தெரிவித்ததாவது, ``தமிழ்நாட்டு மீனவர்கள்மீது இந்திய அரசு பாகுபாடு காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்களும் இந்தியநாட்டு மீனவர்கள்தான் என்பதை கருத்தில்கொண்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தாக்குதல் நடத்தும் கடற்படையினருக்கு தண்டனை கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும் கண்துடைப்புக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போக்கை கைவிட்டு, மத்திய அரசிடம் கலந்துபேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்!" என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

அன்புமணி ராமதாஸ்

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது. தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

கச்சத்தீவு திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்துவது தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from Tamilnadu News https://ift.tt/0GTVbjm

Post a Comment

0 Comments