சமீப காலமாகச் சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஒரு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், வியாசர்பாடியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த இரண்டு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் ஒரு தரப்பினருக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகில் வந்தபோது, இரண்டு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், அவர்களில் சிலர் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்டை போட்டிருக்கிறார்கள். அப்போது ஒரு தரப்பினர் ரயில் நிலையத்தில் இறங்கி ஓடினர்.
மாணவர்கள் கத்தியுடன் ஓடியதைக் கண்ட பொதுமக்கள், அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்பு இரண்டு தரப்பு மாணவர்களும் அங்கே கீழே கிடந்த கற்களைக் கொண்டு தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து ரயில்வே போலீஸார் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.
இதனையடுத்து, ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, சண்டை போட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியை போலீஸார் மேற்கொண்டனர். அதில் ஒருசில மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்துள்ள நிலையில் அவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல ரயில் நிலையத்தில் சண்டை போட்ட சில மாணவர்களைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/OviwhFP
0 Comments