மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனேவில் நடக்கும் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக மகாராஷ்டிரா வந்திருந்தார். அவர் புனேவில் பிரசாரம் செய்துவிட்டு, கோலாப்பூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``முதல்வராக வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே சரத் பவார் காலில் சரணடைந்துவிட்டார். பிரதமர் மோடியின் மிகப்பெரிய கட்அவுட்டை வைத்து எங்களுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சரத் பவார் காலில் விழுந்து சரணடைந்துவிட்டார். நாங்கள் அதிகாரத்துக்கு அலையவோ அல்லது கொள்கையை விட்டுக்கொடுக்கவோ இல்லை. கடந்த முறை மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் என்று சொல்லி, அவர் தலைமையில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். இதை பிரதமர் நரேந்திர மோடியும், நானும் பொதுக்கூட்டங்களில் இதைத் தெரிவித்திருந்தோம்.
ஆனால், உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டார். தேர்தல் கமிஷனின் முடிவு வரவேற்கத்தக்கது. இனி அவர்கள் (உத்தவ்) பாடம் கற்றுக்கொள்வார்கள். வஞ்சகத்தால் சில நாள்களுக்கு நீங்கள் அதிகாரத்துக்கு வரலாம். ஆனால், தேர்தல் களத்தில் வெற்றி பெற தைரியம் வேண்டும்" என்று தெரிவித்தார். 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் 48 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அமித் ஷாவின் வருகை குறித்து உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``யாரோ (அமித் ஷா) புனே வந்திருக்கிறார். அவர் இன்றைய நாளை மிகவும் நல்ல நாள் என்று கூறியிருக்கிறார். அவர்களுடன் சென்ற அடிமைகளுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு நல்ல நாள். அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டியிட்டுக் கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். எனது வீட்டிலிருந்து என்னை வெளியேற்றியிருக்கிறார்கள். திருடர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. இதனை அனுமதித்தால் எந்தக் கட்சியிலும் இது போன்று அடிக்கடி நடக்கலாம்.
முன்பெல்லாம் பொதுக்கூட்டங்களில் மோடியின் முகக்கவசத்தை மக்கள் அணிந்தனர். ஆனால், இப்போது பால் தாக்கரேவின் முகக்கவசத்தை மோடி அணிகிறார். என்னுடைய தந்தையின் முகம் உங்களுக்கு வேண்டும். ஆனால், மகனின் முகம் தேவையில்லை. திருடப்பட்ட வில் அம்புடன் என் முன்பு வாருங்கள். என்னிடம் ஒளிரும் தீபம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார். சரத் பவார் காலில் விழுந்துவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டியிருப்பது குறித்து கூறிய உத்தவ் தாக்கரே, ``கொள்கைகளை மறந்து ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சயத்துடன் யார் கூட்டணி வைத்தது" என்று கேள்வி எழுப்பினார்.
from Tamilnadu News https://ift.tt/9R4QaLo
0 Comments