ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார். `முற்றுகைப் போராட்டம்’ என்று சொல்லிவிட்டு, காவலர்கள் கைதுசெய்ய முற்படும்போது நம்பி வந்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பித்துச் செல்வதும், `20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன்’ என்று கூறுவதும், `ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது இரண்டு லட்சம் கேஸ் போட்டிருக்கிறேன்’ என்று உளறுவதும் புத்திசாலித்தனம் என்றால் நாங்கள் செய்வது முட்டாள்தனம்தான். உதயநிதியின் கையில் ஏந்திய செங்கல் எதிர்த் தரப்பினருக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த ஒற்றைச் செங்கல் என்ன செய்தது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்த சமயத்தில், நாடு முழுவதும் மொத்தம் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் மூன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அவை அனைத்தும் வடமாநிலங்களில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் சுற்றுச்சுவர்கூட எழுப்பவில்லை. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டையும் தமிழர்களையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. இந்த அரசு இருக்கும்வரை தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமையவிட மாட்டார்கள். அண்ணாமலை எனும் அரசியல் கோமாளிக்கு அதைக் கேள்வி கேட்கத் துப்பில்லை. தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள உதயநிதியைப் பற்றிப் பேசிவருகிறார்.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். தி.மு.க பொறுப்புக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. உண்மையில் இந்த அரசு மக்களுக்கு உருப்படியாக ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்திருந்தால் அது குறித்து மக்களிடம் பேசி வாக்குச் சேகரிக்க முடியும். ஆனால், இதுவரை தி.மு.க ஆட்சியில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ரௌடிகளின் அராஜகம், கொலை, கொள்ளை என மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. தன் மகனை அமைச்சராக்க வேண்டும், தன் தந்தைக்குப் பேனா சிலை வைக்க வேண்டும் என்பனவற்றில் காட்டும் அக்கறையை, சிறிதளவாவது மக்கள் நலனில் காட்டுகிறாரா... தன் தந்தையின் ஆட்சியின் பெருமைகளைச் சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாத உதயநிதி, வீதி வீதியாகச் செங்கல்லைத் தூக்கிக்கொண்டு அலைகிறார். தமிழகத்தின் 20 ஆண்டுக்கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என்று அறிவித்தவர் பாரதப் பிரதமர் மோடி. சமீபத்தில்கூட நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, `எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி முட்டாள்தனமாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்பதையே அண்ணாமலை பேசியிருக்கிறார்.’’



from Tamilnadu News https://ift.tt/Utqiy9k

Post a Comment

0 Comments