"வேட்டி கட்டுவதும், மீசை வைப்பதும்தான் ஆண்மையா?" - எடப்பாடி பழனிசாமியைச் சாடிய கனிமொழி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி ஈரோடு சம்பத் நகரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``தந்தை பெரியாரின் வாரிசான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. வாக்குகள் வித்தியாசம் எவ்வளவு என்பதுதான் பேசப்பட வேண்டியதாக இருக்கிறது. அ.தி.மு.க-வினர் தங்களது வேட்பாளரை முடிவு செய்யவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலையில் இரண்டு இலைகளும் வெவ்வேறு திசையை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது. அந்த தாமரை, அதானி எனும் கோடீஸ்வரரை மட்டும் தாங்கிப் பிடிக்கும் நிலையை எட்டியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 4,000 கிலோ மீட்டர் நடந்து மக்களைச் சந்தித்து வந்திருக்கும் ராகுல் காந்தி, மக்களவையில் அதானி குறித்து கேள்வி கேட்டால், `நீங்கள் ஏன் நேரு என பெயர் வைக்காமல் காந்தி என பெயர் வைத்திருக்கிறீர்கள்' என கேட்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ராகுல் காந்தியுடன் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்கும் சரமாரி கேள்விகளுக்கு பிரதமர் சொல்லும் பதில் இதுதானா?

பிரசாரம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் தேர்தல் பரப்புரையில் பேசும்போது, தி.மு.க-வினர் மக்களை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். மக்களை ஒரு நாள் அடைத்து வைக்கலாம். நாள்தோறும் அடைத்து வைக்க முடியுமா... அ.தி.மு.க-வினர் தோல்விக்கு இப்போதிருந்தே காரணம் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து ஆண் மகனா... வேட்டி கட்டுகிறீர்களா... மீசை இருக்கிறதா என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி கேட்டுகிறார். நீங்கள் பெரியார் மண்ணில் நின்று கொண்டு யாரைப் பார்த்து கேட்கிறீர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி வேண்டும் என்பதற்காக யார் காலில் விழுந்திருக்கிறார்... அ.தி.மு.க, பயந்து கொண்டிருக்கும் பா.ஜ.க-வைப் பார்த்து கேள்வி கேட்கும் முதல் குரலாக மு.க.ஸ்டாலினின் குரல் உள்ளது.

பிரசாரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது அவருடைய காலில் விழுந்தீர்களே... அவர் மறைந்த பிறகு பதவி வேண்டும் என்பதற்காக மண்புழுவைபோல ஊர்ந்து சென்று சசிகலா காலி விழுந்தீர்களே... இதுதான் உங்கள் ஆண்மையா... வேட்டியும், மீசையும்தான் ஆண்மை என்றால் நீங்கள் காலில் விழுந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் மீசை வைத்திருந்தார்களா... இன்று 50,000 கொடுத்தால் அறுவை சிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகலாம், பெண் ஆணாக மாறலாம். வேட்டி கட்டுவதும், மீசை வைத்திருப்பதும் ஆண்மை ஆகாது. தோல்வி பயத்தில் பிதற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.



from Latest News https://ift.tt/Gym0xvY

Post a Comment

0 Comments