மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் கல்லூரி அமைந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனராம். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், கல்லூரியின் முதல்வரைப் பணிநீக்கம் செய்யக்கோரி பேராசிரியர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரி மாணவர்களும் கடந்த மூன்று நாள்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதையடுத்து நேற்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில் கல்லூரியில் ஆய்வு நடைபெற்றது. அப்போது பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததுடன், இணை ஆணையர், கல்லூரி முதல்வரைப் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நேரில் கேட்டறிந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, ``கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகள் 10 முதல் 15 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்" என்றார். அதைத் தொடர்ந்து, 46 பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இந்து சமய அறநிலை ஆட்சித்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் பரிந்துரை செய்தார். இது, அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தி ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம் குறித்து துறைரீதியான விசாரனைக்குப் பரிந்துரை செய்யப்படும் எனவும், கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அதையடுத்து, மாணவர்கள், பேராசிரியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
from Latest News https://ift.tt/KD4YrCN
0 Comments