ஈரோடு: திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே கைகலப்பு - மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு!

ஈரோடு, ராஜாஜிபுரம் பகுதியில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துபாண்டி, நா.த.க மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், நா.த.க. தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பு தென்னரசு உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பா.ஜ.க பட்டியலின மாநில பொதுச்செயலாளராக இருந்து அண்மையில் தி.மு.க-வில் இணைந்த விநாயகமூர்த்தி தலைமையிலான தி.மு.க-வினர் சிலர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தரக்குறைவாக விமர்சித்ததாகவும், `எங்கள் பகுதியில் நீங்கள் பிரசாரம் செய்யக் கூடாது' என்று கூறி தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் நாம் தமிழர் கட்சியினர்மீது தடியால் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

நாகசுந்தர்

இந்தத் தாக்குதலில் தொழிற்சங்க மாநிலத் தலைவர் அன்பு தென்னரசுவின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த நாகசுந்தரின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. இதில் கொதிப்படைந்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களை திருப்பித் தாக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டதால் அங்கேயே ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். காயமடைந்தவர்கள் அன்பு தென்னரசுவை மீது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாலை மறியல்

நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். இந்த தாக்குதல் குறித்து வேட்பாளர் மேனகா நவநீதன் பேசுகையில், ``ஜனநாயக முறைப்படி வாக்குகளைச் சேகரிக்க வந்த எங்களை தடியால் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க-வைச் சேர்ந்த விநாயகமூர்த்தி உள்ளிட்ட கும்பலை போலீஸார் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இது குறித்து நம்மிடம் பேசிய டி.எஸ்.பி.ஆனந்தகுமார், ``பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



from Latest News https://ift.tt/lfHBQEp

Post a Comment

0 Comments