கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நெருங்குவதால், ‘ஊழல்’ என்ற வார்த்தையை யார் பயன்படுத்தினாலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், இம்மாநிலத்தின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவுள்ள IAS ரோகிணி சிந்தூரிக்கும், கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ரூபாவுக்கும் இடையே, சமூக வலைதளத்தில் ஏற்பட்டுள்ள, ஊழல் புகார் சண்டை பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக ரூபா, சிந்தூரியின் சில படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு, ‘‘மைசூர் கிருஷ்ணராஜ நகரைச் சேர்ந்த ஜனதாதள எம்.எல்.ஏ சாரா மகேஷ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஒன்றாக உணவகத்தில் இருக்கின்றனர். ஓர் அதிகாரி, அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார்?,’’ எனக்கேள்வி எழுப்பியதுடன், ‘ரோகிணி சிந்தூரி தினமும் தனிப்பட்ட தனது புகைப்படங்களை, 3 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளார், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளார்,’’ என, ரோகிணி சிந்தூரி மீது, 20 குற்றச்சாட்டுகளைக் கொண்ட, ஒரு விரிவான ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார் ரூபா. மேலும், ‘‘ஊழல் குறித்த பேச்சுகள் இருந்தபோதும், ரோகிணி சிந்தூரி மீது ஏன் விசாரணை நடத்தவில்லை,’’ என, கர்நாடகா மாநில அரசையே விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.
மனநோய் என்பது...
இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பிப்ரவரி, 19, ரோகிணி சிந்தூரி ஊடக அறிக்கையை வெளியிட்டு, அதில், ``மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்னை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாகிறது. எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரசாரத்தை நடத்துகிறார் ரூபா. அது அவரின் நிலையான செயல்பாடாகவே உள்ளது, அவர் பணியாற்றிய ஒவ்வோர் இடத்திலும் அதைச்செய்துள்ளார். ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என, பதிலடி கொடுத்திருந்தார்.
‘வெட்கக்கேடானது..’!
இப்பிரச்சினை கர்நாடகாவில் பூதாகரமாகியுள்ள நிலையில் நேற்று, கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரன் நிருபர்களிடம், ‘‘அரசின் உயர்மட்ட பெண் அதிகாரிகள் இருவரும், சாதாரண மக்களைப்போல சமூக வலைதளத்தில் சண்டையிடுவது உண்மையில் வெட்கக்கேடானது. இது போன்ற செயல்களை கண்டு, நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்கள் இருவரும் மிக மோசமாக நடந்துகொண்டுள்ளனர்; தெருக்களில் மக்கள் கூட இதுபோன்று பேசிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், ஊடகத்தின் முன் இருவரும் இப்படி நடந்து கொண்டது சரியல்ல. இது அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப, தலைமை செயலாளருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்,’’ என, காட்டமாக தெரிவித்தார்.
அரசு இருக்கா... இல்லையா?
இந்த விவகாரம் தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று மாலை நிருபர்களிடம், ‘‘தலைமைச்செயலர் உடனடியாக இரண்டு பெண் அதிகாரிகளையும் அழைத்து எச்சரிக்க வேண்டும். கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு, இந்த சம்பவம் தான் உதராணம். இங்கு, அரசு இருக்கா... இல்லையா? என்பதே சந்தேகமாக உள்ளது,’’ என, கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று பக்கங்கள்... 7 புகார்கள்!
இப்படியான சூழலில் நேற்று இரவு (20–ம் தேதி), 9:00 மணிக்கு மேல், ரூபா தனது ட்விட்டரில், ‘ரோகிணியின் ஊழல் குறித்த எனது புகார்கள் ஏற்கனவே பொதுத்தளத்தில் உள்ளது. ஆனால், தயவு செய்து, தவறானவற்றை பரப்பாதீர்கள். அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்,’’ எனப்பதிவிட்டு, தலைமைச்செயலருக்கு அவர் அனுப்பியதாக, மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘IAS ரோகிணி சிந்தூரி மீது ஏற்கனவே உள்ள ஊழல் புகார்கள் குறித்தான விசாரணையை விரைவுபடுத்துவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள ரோகிணி சிந்தூரி குறித்தான புதிய ஊழல்களின் தகவல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கானோர் கொரோனாவில் இறந்தபோது, ரோகிணி சிந்தூரி கமிஷனர் அலுவலகத்தில், Swimming Pool கட்டியதற்காக அவர் மீது விசாரணை நடத்தக்கோரி, ஏற்கனவே, IAS ரவிசங்கர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை இன்னும் நடக்கவில்லை. இந்த விசாரணையை விரைவில் நடத்துவதுடன், விசாரணை தாமதிக்க காரணமாக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 2023-க்கான சொத்து விபரத்தில், அசையாச்சொத்துக்களாக, ஜலஹள்ளியில் அவர் கட்டி வரும் அவரது பிரம்மாண்ட வீடு குறித்து, ரோகிணி சிந்தூரி குறிப்பிடவில்லை. அந்த வீட்டுக்கு இத்தாலியில் இருந்து, ரூ. 1 – 2 கோடி ரூபாய்க்கு Furniture வாங்கியதும், 26 லட்சத்துக்கு Appliances வாங்கியதாக, அவரின் Chat conversationsல் கூறியுள்ளார். இது குறித்து விசாரிக்க வேண்டும்,’’ என்பன உள்ளிட்ட, ஏழு ஊழல் புகார்களை முன்வைத்துள்ளார்.
நடத்தை விதிகளுக்கு எதிரானது!
மேலும், நிருபர்களுக்கு பேட்டியளித்த ரூபா, ’’இந்த படங்கள் தற்போது தான் எனக்கு கிடைத்தன. இந்த படங்கள் முன்பே கிடைத்திருந்தால், அப்போதே வெளியிட்டுருப்பேன்; கடந்த ஒரு மாதமாகத்தான் இந்த படங்கள் எனக்கு கிடைத்துள்ளன. இதை தற்போது அரசு கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். நடவடிக்கை என்னவாக இருக்கும் என, நான் பொறுத்திருந்து பார்ப்பேன். இந்த படங்கள் மூலமாக இது தனிப்பட்ட விவகாரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அரசு பணியாளர்கள் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான செயல் இது,’’ என, பேட்டியளித்துள்ளார்.
ஏற்கனவே, ‘கர்நாடகாவில் பா.ஜ.க 40 சதவீதம் ஊழல் செய்கிறது’ என்ற வார்த்தைகளை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தேர்தலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில், IAS அதிகாரி மீது IPS அதிகாரி, அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஊழல் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என அரசையே விமர்சித்துள்ளதும், அரசியல் களத்தில் மட்டுமின்றி, தேசிய அளவில் IAS, IPS அதிகாரிகளிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பெண் அதிகாரிகளின் ‘ஊழல் புகார் வார்’, டிரான்ஸ்பரில் முடியும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
from Latest News https://ift.tt/GJ7gkyv
0 Comments