தமிழ்நாட்டில் வீடு, வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. இதற்குத் தேவையான மின்சாரம் அனல், காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மூலம் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் அதிக அளவு மின்விபத்துகள் நடந்து வந்தன.
இதையடுத்து புதிதாக அல்லது தற்காலிகமாக மின் இணைப்பு பெறுவோர் RCD கருவி பொருத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இது முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கருவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்களை மின்வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழக மின்சாரவாரியம் அனைத்து தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி புதிதாக அல்லது தற்காலிகமாக மின் இணைப்பு பெறுவோர் RCD (RESIDUAL CURRENT DEVICE) பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்கள் RCD-களை நிறுவுவதை உறுதிசெய்ய அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. விநியோகத்தை செயல்படுத்துவதற்கு முன்பு பாதுகாப்பு அம்சங்களில், RCD-ன் நிறுவல் கட்டாயமாகும். மேலும் இந்த விஷயம் தீவிரமாகப் கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய தலைமை பொறியாளர்கள் சிலர், "தமிழ்நாட்டில் மின்விபத்து தொடர்கதையாக இருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் ஏசி, குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றில் அவ்வப்போது மின்கசிவு ஏற்படுகிறது. இதில் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் சம்பந்தப்பட்ட சாதனங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகின்றன.
எனவேதான் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் RCD கருவியை பொருத்த வேண்டும் என்பதை மின்வாரியம் தற்போது தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. இந்த கருவி பொருத்தப்பட்டவுடன் அது சீரான அளவில் மட்டுமே மின்சாரம் வருவதை உறுதி செய்யும். அப்போது விபத்து ஏற்படுவது தடுக்கப்படும்" என்றனர்.
from Tamilnadu News https://ift.tt/6V2xayu
0 Comments