அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு, சென்னையிலுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய சிறுமி, வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் பெயரைச் சொல்லி, அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறாள். இதுபற்றி உடனடியாக கட்டுப்பாட்டு அறை போலீஸார், வேலூர் மாவட்ட போலீஸாரிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து, வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் குழுவினருடன் காட்பாடி போலீஸார் அந்தப் பள்ளிக்கு விரைந்துச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ‘வெடிகுண்டு ஏதுமில்லை’ என்பது உறுதிச்செய்யப்பட்டது.
இதையடுத்து, மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, வேலூர் தெற்கு காவல் எல்லைக்குஉட்பட்ட ஓல்டு டவுன் வள்ளலார் தெருவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து பேசியிருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்துச் சென்று, வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, மிரட்டல் விடுத்த சிறுமியும் பிடிபட்டார். அவளிடம் விசாரித்தபோது, மிரட்டலுக்கு உள்ளான பள்ளியில் அந்தச் சிறுமி ஒன்பதாம் வகுப்புப் படிப்பதும், இன்று நடைபெறவிருக்கும் புவியியல் தேர்வுக்கு படிக்காத காரணத்தினால், தேர்வு பயத்தில் பாட்டியின் செல்போனை பயன்படுத்தி இப்படி மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறாள். இப்படி செய்தால், பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள் என்றும் நினைத்ததாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, சிறுமியின் எதிர்கால நலன்கருதி போலீஸார் எச்சரித்து, அறிவுரைக் கூறிவிட்டு சிறுமி மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விடுவித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால், வேலூரில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
from Latest news https://ift.tt/1zaolu9
0 Comments