சிவகங்கையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை சாலையிலுள்ள அம்மா அரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான கட்சி அ.தி.மு.க. இந்தக் கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னைப் போன்று இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்களும் சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து முன்னேறியிருக்கிறோம். தி.மு.க-வைப் போல கொள்ளையடிக்கவில்லை. மக்களின் உள்ளத்தை வென்று முன்னேறியிருக்கிறோம்.
எங்கள்மீது தி.மு.க-வினர் எத்தனை வழக்குகளைப் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் சந்திப்போம். இன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை ஆட்சி நடக்கிறது. இதனை மக்களிம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் நமது கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்த மண் வீரம் செறிந்த மண். வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்த மண். இந்த மண்ணைச் சேர்ந்த வீரம் செறிந்தவர்களின் துணையுடன் விரைவில் அ.தி.மு.க ஆட்சியை அமைப்போம். தி.மு.க-வுக்கு பி.டீம் ஒன்று இருக்கிறது. இதய தெய்வம் அம்மா பிறந்தநாள் என்பதைக்கூட அறியாதவர்கள், எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
பி.டீமை வைத்துக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கிவிட நினைத்தால் முடியாது. பீ.டீமை வைத்துக் கொண்டு எங்களுக்கு இடையூறு அளிக்க நினைத்தால், எதிர்காலத்தில் தி.மு.க இல்லாத நிலை ஏற்படும்.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய இயக்கம் அண்ணா திராவிட இயக்கம். எப்போது, ஆட்சிக்கு வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்குவதை மட்டுமே தி.மு.க வேலையாகச் செய்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைபடாமல், வேறு எந்தக் கட்சியும் 22 மாதங்களில் இவ்வளவு அவப்பெயர் பெற்றது கிடையாது. ஆனால், இந்த தி.மு.க ஆட்சி 22 மாதங்களில் மிகப்பெரிய அவப்பெயரை பெற்றிருக்கிறது.
தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை. ஏன் சிவகங்கைக்கென ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா... வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம் கட்டியது அ.தி.மு.க ஆட்சியில், உப்பாற்றில் தடுப்பனை கட்டியது அ.தி.மு.க ஆட்சியில்... இப்படி பல்வேறு திட்டங்களைச் சொல்லலாம்.
கீழடி அருங்காட்சியகம் அமைக்க முதற்கட்ட நிதியான 12 கோடி ரூபாயை ஒதுக்கியது அ.தி.மு.க அரசு. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. 26 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினோம். அந்த திட்டத்தையும் இந்த அரசு கைவிட்டிருக்கிறது. 2011-க்கு முன்பு சாலைகள் எப்படி இருந்தன. அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதி எப்படி இருந்தது.
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் சேர்மன் ஆக ஸ்டாலின் இருக்கிறார். இயக்குநர்களாக அமைச்சர் உதயநிதியும், கனிமொழியும் செயல்படுகிறார்கள். எனவே தமிழகத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் அவர் மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கியிருக்கின்றன.
சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால் 150 படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன. அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர்.
கடலில் 300 அடி தூரத்தில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா சிலை வைப்பது அவசியமா... அண்ணா அறிவாலயத்திலேயோ, கலைஞர் நினைவிடத்திலேயோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே?
தற்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார். ஏன் கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாருமே இல்லையா?
அரச பரம்பரையா ஸ்டாலின்... அவருக்குப் பிறகு அவர் மகன் என தொடர வேண்டுமா... தி.மு.க போல் குடும்ப கட்சியல்ல அ.தி.மு.க. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் தொண்டர்கள்கூட உயர்ந்த பதவியை அடையலாம். ஸ்டாலின் அவர்களே நீங்கள் தலைவராக இருந்து பார்க்கிறீர்கள் நான் தொண்டனாக இருந்து பார்க்கிறேன். தொண்டன் என்பதே ஒரு கட்சியை காக்க முடியும். தொண்டன்தான் ஒரு கட்சியின் உயிர்மூச்சு. அ.தி.மு.க என்பது தொண்டர்களால் ஆன கட்சி. தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்ட அம்மா கிளினிக்கில் என்ன தவற்றைக் கண்டுபிடித்தீர்கள். அதனை மூடிவிட்டீர்கள். ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அன்று அதைக் கண்டு நாடே வியந்தது. இப்படி அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க அரசின் 22 மாத சாதனை.
அம்மா உணவகம் திட்டத்தை மற்ற மாநிலங்கள் செயல்படுத்த, ஆய்வு செய்து செல்கின்றன. ஆனால், இந்த அரசு இங்க அதை மூடி வருகிறது.
ஏழை எளிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயில 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ஏற்படுத்தினோம். தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு இலவசப் பேருந்து என அறிவித்தார்கள். ஆனால், அந்தப் பேருந்துகளின் நிலை மிகவும் மோசம். முதியோர் உதவித் தொகை அதிகமாக வழங்கப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். ஆனால், தி.மு.க ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு உதவித் தொகையை நிறுத்தியிருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினோம். நான் ஒரு விவசாயி என்பதால், அனைத்து விவசாயிகளுக்கும் முழு நேர மும்முனை மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தேன். ஆனால், இந்த ஆட்சியில் பகுதி நேர மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் அ.தி.மு க ஆட்சியிலிருந்தால் இந்நேரம் இந்த வறட்சியான சிவகங்கை மாவட்டம் பசுமையாக காட்சியளிக்கும்.
அம்மா ஆரம்பித்த திட்டம் பொங்கல் தொகுப்பு, அதில் பல்வேறு பொருள்களையும் சேர்த்து வழங்கினோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 21 பொருள்கள் வழங்குவோம் எனச் சொன்னார்கள். அந்தப் பொருள்கள் அனைத்தும் தரமில்லை. அப்படிப்பட்ட பொருள்களை வழங்கியவர்தான் இந்த முதல்வர். ஏழைகளுக்கு வழங்கும் அத்தியாவசியப் பொருளில்கூட ஊழல் செய்தது தி.மு.க அரசாங்கம்தான். ஊழலைப் பற்றி பேசுவதற்கு இந்த அரசுக்குத் தகுதியில்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க-தான். தி.மு.க தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலின் வாக்கிங் போகும்போதுகூட நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார். அ.தி.மு.க ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அம்மாவைப் பொறுத்தமட்டில் குழந்தைகள் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆருக்கு குழந்தை கிடையாது. இவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாம்தான்.
தி.மு.க தலைவருக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். மு.க.ஸ்டாலின் தலைவனாக இருந்து கட்சிக்காரர்களையும், மக்களையும் பார்க்கிறார். நான் தொண்டர்களில் ஒருவனாக இருந்து மக்களை நேசித்து பணியாற்றுகிறேன்." என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, பாஸ்கரன், காமராஜ், கோகுல இந்திரா மற்றும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
from Latest news https://ift.tt/Jq52eAM
0 Comments