`இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யவில்லை. நாங்கள்தான் முதலில் அறிமுகம் செய்கிறோம்’ எனப் பெருமையுடன் கூறி, வேளாண்மைக்குத் தனி பட்ஜெட்டை 2021-ம் ஆண்டு தி.மு.க அரசு தாக்கல் செய்தது. அது தொடர்பாக, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “முதலாம் ஆண்டு தவழ்ந்த குழந்தை, இரண்டாம் ஆண்டு நடந்த குழந்தை, மூன்றாம் ஆண்டில் ஓடத் தொடங்கிவிடும்” என்றார்.

நடப்பாண்டு வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (21-ம் தேதி) தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாக முருகேசனிடம் பேசினோம். `` `விவசாய பட்ஜெட்’ என்று பெயரளவில் சொல்லப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனுமில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏழு தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் 50,000-க்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கடந்த நிதிநிலை பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.4,000 தருவதாக அறிவித்தது தி.மு.க அரசு. இதனால் 1.2 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வருவாய் பங்கீட்டுச் சட்டத்தை நீக்கினால் மட்டுமே, மாநில அரசால் தனியாக நிதி உதவி அளிக்க முடியும். இதை, கடந்த பட்ஜெட் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தினோம். இப்போதும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம்.

2022 தமிழக பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ‘ரூ.400 கோடி’ அறிவிக்கப்பட்டது. அதே திட்டத்தின் மறு வடிவமாக இந்த பட்ஜெட்டிலும் ‘உயிர்மை வேளாண்மைக் கொள்கை’ என்னும் பெயரில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டம் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் அதுபோல உதவித்தொகையாவது வழங்கியிருக்க வேண்டும், செய்யவில்லை. பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,399 கோடி ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், பிரீமியம் தொகை என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து கலெக்ஷன் மாத்திரமே நடக்கிறது. காப்பீட்டுத்தொகை விவசாயிகளின் கைக்கு வந்துசேர்வதில்லை” என்றார் கொதிப்புடன்.
சென்னையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், `பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தமிழக அரசு பெரும் தொகையை காப்பீடு நிறுவனங்களுக்குச் செலுத்துகிறது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே, தமிழக அரசு சார்பில் பயிர்க்காப்பீடு நிறுவனம் தொடங்கிட பரிசீலிக்க வேண்டும்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நம்மிடம் பேசுகையில், “சிறுதானிய உற்பத்திக்கும், எண்ணெய் வித்துகள் விளையும் மாவட்டங்களில் பயிர் விளைச்சல் பரப்பளவைக் கூட்டவும் முறையே, ரூ.92 கோடி, ரூ.28.5 கோடி நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை செயல் வடிவம் பெறவேயில்லை. நிதியை ஒதுக்காமல் வெறும் பட்டியலை மட்டும் வாசிப்பதுதான் வேளாண் பட்ஜெட்டின் சாதனை. ஒரு பக்கம், `வேளாண் மண்டலத்தைப் பாதுகாப்போம்’ என்கிறார்கள். மறுபக்கம் விவசாய நிலங்களை, ‘பெட்ரோலிய, ரசாயன’ மண்டலமாக அறிவிக்கிறார்கள். முதல்வர்கள், அமைச்சர்கள் மேடையில் பேசுவது ஒன்றாகவும், செயல்பாடுகள் வேறாகவும் இருக்கின்றன” என்று வெடித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் தரப்பிடம் விளக்கம் கேட்டோம். “வேளாண் பட்ஜெட் எவ்வளவு சிறப்பானது என்பதற்கு, கரும்பு விவசாயம் 9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு அதிகரித்திருப்பதே நல்ல சான்று. மயிலாடுதுறையில் என்.பி.கே.கே.ஆர் சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து வருகிறோம். ஒழுங்குமுறைக் கூடங்களெல்லாம் முறைப்படி பராமரிக்கப்பட்டுவருகின்றன. பயிர்க்காப்பீடு விஷயத்தில் மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டிருப்பதால், அது முறைப்படி அனைத்து விவசாயிகளையும் எட்ட முடியாத நிலை உருவாகியிருக்கலாம்.

கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் இயற்கை வேளாண்மைக்குக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழ்நாடு மட்டும்தான் முறையாகப் பயன்படுத்திவருகிறது. எனவே, அனைத்துத் திட்டங்களும் அறிவிப்போடு நின்றுவிடுவதாகச் சொல்வது ஏற்கக்கூடியதல்ல” என்றவர்களிடம், என்.எல்.சி., காவிரி டெல்டா பகுதிகள் பெட்ரோலிய, ரசாயன மண்டலங்களாக அறிவிக்கப்படுவது பற்றிக் கேள்வியெழுப்பியபோது, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
from Latest news https://ift.tt/xrDe5VH
0 Comments