மார்ச் 20... கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கடந்து போயிருக்கிறது. அந்த நாளுக்கு என்ன சிறப்பு தெரியுமா? அது, உலகின் மகிழ்ச்சி தினம்!
‘என்னது மகிழ்ச்சி தினமா... அதுக்குக்கூட ஒரு தினமிருக்கா?’ என்று கேட்கும் நிலையில்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஒவ்வோராண்டும் இந்த தினத்தையொட்டி `உலகின் மகிழ்ச்சி அறிக்கை’ (The World Happiness Report) வெளியிடுவதை, கடந்த 10 ஆண்டுகளாகவே வழக்கத்தில் வைத்துள்ளது, ஐ.நா-வின் `நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு’ என்கிற துணையமைப்பு. அதன்படி, மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் ஃபின்லாந்து, இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு... 126-வது இடம். கடைசி 137-வது இடத்திலிருக்கிறது... ஆஃப்கானிஸ்தான்.
ஆய்வு, அறிக்கை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்கி றோமா? நம்மில் பலர் வேலை, திருமணம், குழந்தை, நட்பு எனப் பலவற்றையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு அமைத்துக்கொள்கிறோம். ஆனால், அதற்குரிய தருணங்களைத் தவறவிட்டு, வாழ்க்கையின் அவசரங்களைத் தூக்கித் தோளில் போட்டபடி பறக்கிறோம். துணையுடன் சலிக்கச் சலிக்கப் பேசிய பொழுது, பிள்ளைகளுடன் சிரிக்கச்சிரிக்க விளையாடிய / உரையாடிய தருணம், நட்புடன் அவசரமில்லாமல் ஆற அமர கழித்த நாள்... கடைசியாக எப்போது என்று யோசித்துப் பாருங்கள்.
மகிழ்ச்சிப் பாதையில் பலருக்கும் இருக்கும் தடைக்கல்... நாம் நிறைவாக இருக்கிறோம் என்பதை உணரத் தவறி, ஒரு போதாமை மனநிலையிலேயே நம்மை இருத்திக்கொள்வதுதான். ஆரோக்கியம், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் அக்கறை என இவற்றை இழக்கும்போதுதான், காலம்கடந்து அதை உணர்கிறோம்.
இந்திய - அமெரிக்க எழுத்தாளரான தீபக் சோப்ரா, மகிழ்ச்சி குறித்துப் பேசிய பிரபல காணொலி ஒன்று உண்டு. மகிழ்ச்சியை ‘ஹாப்பினஸ்’ (Happiness), ‘ஜாய்’ (Joy) என இரண்டு வார்த்தைகளில் குறிப்பிடும் அவர், ``ஹாப்பினஸுக்கு ஒரு காரணம் இருக்கும். ஆனால், ஜாய் என்பது எந்தக் காரணத்தின் தேவையின்றியும் மகிழ்ச்சியாக இருப்பது. ஜாய்ஃபுல்லாக இருப்பதற்கு நீங்கள், உலகின் நல்ல, கெட்ட வரையறைகளில் இருந்து சுதந்திரமாகவும், விமர்சனங்களுக்கு எதிர்ப்பு சக்தி பெற்றும், மதிப்பீடுகளுக்கு பதிலளித்தும், யாருக்கும் கீழ் இல்லாமலும், யாருக்கும் மேல் இல்லாமலும், அச்சமற்றும் இருக்க வேண்டும்’’ என்கிறார்.
ஓர் ஆய்வில் சில முதியவர்களிடம், ‘இன்னும் கொஞ்சம் அனுபவித்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?’ என்று கேட்கப்பட, உணவு, பயணம், ஓய்வு, காதல், நண்பர்கள் என அனைவரிடமும் சொல்வதற்கு ஒரு விஷயமோ, பட்டியலோ இருந்தது. அப்படிச் சொல்ல எதுவும் இல்லாதபடி வாழ்வோம்... சந்தோஷமாகவும் நிறைவாகவும் தோழிகளே!
- உரிமையுடன்
ஸ்ரீ...
ஆசிரியர்
from Latest news https://ift.tt/cEDWoAK
0 Comments