விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீஜெயநகரில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். அப்போது, அருப்புக்கோட்டை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கக் கோப்பினை அருப்புக்கோட்டை நகர் காங்கிரஸ் கட்சியினர், மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழகத்தையும், விருதுநகரையும், அருப்புக்கோட்டையையும் புறக்கணித்து வருகிறது. அருப்புக்கோட்டையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வாரம் மூன்றுமுறை அருப்புக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டுமென அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளது.
அதேபோல நாடாளுமன்றத்திலும் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால் எந்த பலனும் இல்லை. மத்திய பா.ஜ.க. அரசு அருப்புக்கோட்டையை வஞ்சிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்தமுறை ரயில்வே மானிய கோரிக்கையில் அதை மீண்டும் வலியுறுத்துவேன். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் ஐந்தாயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதையும் மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் வழங்குவேன்.
அண்ணாமலை மீது அவர் செய்த குற்றத்திற்காக தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அண்ணாமலை மீது சட்டபூர்வமான நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என முழு நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து அருந்ததியினர் சமூக மக்களை சீமான் அவதூறாக பேசி வருவதற்குத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அவருக்கு தக்கப்பாடம் புகட்டிவிட்டனர். தேர்தலில் அவர் டெபாசிட் இழந்துள்ளார். தமிழகத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இணைந்து சதிவேலை செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சதி செய்ய விரும்புகின்றனர். அது பலிக்காது.
தமிழகம் வந்தாரை வாழவைக்கும் பூமி. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற முழு பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலைத்தேடி வருபவர்களுக்கு பாதுகாப்பு இரண்டையும் இந்த அரசு தருகிறது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. தமிழகம் வளர்ந்த மாநிலமாக முன்னேறிக் கொண்டு வருகிறது. இந்தநேரத்தில் பலரும் இங்கு வேலைத்தேடி வருவது வழக்கம். தமிழக இளைஞர்கள் செய்ய முடியாத வேலையை, வட மாநிலத்தவர் செய்கின்றனர். பா.ஜ.க.வினர் பீகாரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்" என கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/rkPjEQR
0 Comments