`கோட், சூட்டெல்லாம் ஒரு மரியாதைக்காக; நானும் விவசாயி மகன்தான்' நெல் மாநாட்டில் உருகிய துணைவேந்தர்!

நமது பாரம்பர்ய நெல் வகைகளில் எத்தகைய மருத்துவ குணங்களும், சத்துகளும் நிறைந்துள்ளன என்பதை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், அவற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் விதமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் பாரம்பர்ய நெல் மாநாட்டு கழகமும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து முதன்முறையாக தேசிய அளவிலான பாரம்பர்ய நெல் மாநாட்டை கடந்த மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி பசுமை விகடன் ஊடக ஆதரவு அளித்திருந்தது.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

இந்த மாநாட்டில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாரம்பர்ய நெல் வகைகளிலுள்ள மருத்துவக் குணங்கள் பற்றிய சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வேளாண் பேராசிரியர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு, ஒரு புத்தகத் தொகுப்பாகவும், அறிக்கையாகவும் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட இருக்கிறது.

இரண்டு நாள்கள் நடந்த இந்த நெல் மாநாட்டை தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

மேலும், இந்த மாநாட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் பங்கேற்று இயற்கை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாரம்பர்ய நெல் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தினர்.

இந்தப் பாரம்பர்ய நெல் மாநாட்டை ஒருங்கிணைத்த வரதராஜன் பேசுகையில்...

``பாரம்பர்ய நெல் ரகங்களில் நிறைய சத்துகள் இருக்குன்னு இதுவரைக்கும் வாய்வழியா சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, அறிவியல் பூர்வமாக எந்தச் சான்றுகளும் நம்மிடையே இல்லை.

அவற்றைப் பூர்த்தி பண்ணும் விதமாதான் `பாரம்பர்ய நெல் மாநாட்டு கழகமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும்' இணைந்து பாரம்பர்ய நெல் வகைகளில் இருக்கக்கூடிய சத்துகளைப் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கும் விதமாக இந்த பாரம்பர்ய நெல் மாநாட்டை நாங்க நடத்தினோம்..!

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

இந்த நெல் மாநாட்டுல நம்ம நாட்டின் பல பகுதிகள் இருக்கிற பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடிய ஆராய்ச்சி மாணவர்கள் மூலமா, சுமார் 60-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கு..!

அவற்றையெல்லாம் வேளாண் விஞ்ஞானிகளும்,இயற்கை விவசாயிகளும் ஆய்வு செஞ்சு ஒரு புத்தகமாகவும், ஆய்வு அறிக்கையாவும் எங்க பாரம்பர்ய நெல் மாநாட்டு கழகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்ப இருக்கு.

நெல் வகைகள்ல இருக்கிற மருத்துவ குணங்களும் சத்துக்களும் அறிவியல் பூர்வமா நிரூபணம் ஆனா, நம் நாட்டின் பல்வேறு பகுதிகள்ல பாரம்பர்ய நெல் வகைகள பயிரிடுற விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..!

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

மேலும் நாட்டுல நோய்கள் இல்லாம, மக்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்குவதுதான், இந்த மாநாட்டின் மிக முக்கியமான நோக்கமே..! அது மட்டுமல்லாமல் இந்த நெல் மாநாட்டுல, இயற்கை விவசாயிகள் எப்படி அரசாங்கத்திட மிருந்து உரிய அடையாள சான்று பெறுவது, இயற்கை விவசாயத்துல மகசூல் இழப்பு ஏற்பட்டா அதை எப்படி மேம்படுத்துவது போன்ற பல்வேறு கருத்துகளையும் எடுத்து சொல்லி இருக்கோம்..!

எங்களுடைய இந்த `தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு' இயற்கை விவசாய உற்பத்தியில மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறோம்" என்றார்.

மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன்... ``நாம் பாரம்பர்ய நெல் வகைகளை பாதுகாக்க தவறியதன் விளைவாகத்தான் கொரோனா போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கெல்லாம் ஆளாக நேர்ந்தது. ஆனால், இந்த பாரம்பர்ய நெல் வகைகளில்தான் எந்த நோய்க்கும் எதிராக செயலாற்றக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக பல வெளிநாட்டு விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்கள் மூலமாக நிரூபணமாகியுள்ளது.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

அவற்றை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக இந்த மாநாடு அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உலகெங்கிலும் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வந்த நிலையில் என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் வசித்து வருகின்ற, நரிக்குறவர் இன மக்களில் ஒருவருக்குக்கூட இந்த கொரோனா தொற்று வரவில்லை.

அதற்கு காரணம் அவர்கள் இன்றும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான். அதுபோல நாமும் இந்த இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டிய தேவையும் அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் டெல்டா மாவட்டம் மிகப்பெரிய அளவிலான சேதத்தை சந்தித்தது.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

ஆனால், தற்போது இயற்கை மீண்டும் தனது வளங்களை யெல்லாம் புதுப்பித்து, தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மனிதர்களாகிய நம் அனைவருக்கும் உண்டு. பிளாஸ்டிக் போன்ற பல நச்சுப் பொருள்களால் இயற்கை அதிகப்படியாக பாதிக்கப்படுகிறது அவற்றைத் தடுக்கும் விதமாகத்தான் தமிழக அரசாங்கம் `மீண்டும் மஞ்சப்பை' என்கிற மகத்தான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் பாரம்பர்ய நெல் பற்றிய மகத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக நடத்தப்படுகின்ற இந்த பாரம்பர்ய நெல் மாநாடு ஒரு வரலாற்றின் தொடக்கமாவும், வருங்கால தலைமுறைக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது" என்றார்.

இந்த மாநாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் பேசுகையில்...

``இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிற இந்தத் தேசிய பாரம்பர்ய நெல் மாநாட்டை எங்களது மத்திய பல்கலைக்கழகத்தில் நடத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மத்திய பல்கலைக்கழகத்துக்கும் விவசாயத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

என்னவென்று சொன்னால்..! இந்த மத்திய பல்கலைக்கழகத்தை நீலக்குடி கிராமத்திலே அமைப்பதற்கு தங்களது நிலங்களை கொடுப்பதற்கு முன் வந்தவர்கள் இந்த ஊர் விவசாயிகள்தான். அவர்களை நன்றியோடு இந்த மகத்தான நேரத்திலே நினைவுகூர்கிறேன்.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

நான் அணிந்திருக்கக்கூடிய இந்த `கோட் சூட்' எல்லாம் ஒரு மரியாதைக்காக தானே தவிர, நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்..!

என்னுடைய தந்தையும், தாயும் விவசாய நிலத்திலே சகதியில் கால் வைத்து ஏர் பூட்டியதன் விளைவாகத்தான் நான் இன்று இவ்வளவு பெரிய மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உயர்ந்து நிற்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன் இன்னும் சில மாதங்களில் என்னுடைய துணைவேந்தர் பதவி முடிந்துவிடும். பிறகு, நிச்சயமாக நான் என் சொந்த ஊருக்குச் சென்று `இயற்கை விவசாயம்'தான் செய்யப் போகிறேன் என்பதை இந்த மாநாட்டு மேடையிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய காலகட்டங்களெல்லாம் சிட்டுக்குருவிகளையே பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கு காரணம், நாம் இயற்கையை அழித்ததுதான்..!  சிட்டுக்குருவிகள், விவசாயத்துக்கு பெருமளவில் பயனளிக்கக்கூடியவை. அதாவது, விவசாய நிலங்களில் பயிரை தாக்கக்கூடிய பூச்சி இனங்களை தின்று, அவை விவசாயத்துக்கு பெரும் பங்காற்றி வந்தவை. ஆனால், அவை காணாமல் போய் இருப்பது மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளது.

தேசிய பாரம்பர்ய நெல் மாநாடு

அத்தகைய சிறப்பு வாய்ந்த சிட்டுக்குருவி இனங்களை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அமைச்சர் அவர்களிடம் எங்களது மத்திய பல்கலைக்கழகம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்..! நமது நாட்டு விவசாயிகள் பயன்படுத்துகிற ஏர் கலப்பையை பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்றன.

`ஏர் கொண்டு உழுது' நமக்கு சோறு போட்டவர்கள் விவசாயிகள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும்கூட. பாரம்பர்ய நெல் வகைகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நம் பாரம்பர்ய பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

காலாற நடந்து... வயிறார உண்டு... கண்ணார உறங்கி... உளமாற உறவினர்களிடம் பேசி வாழ்ந்தால்..! நமக்கு மருத்துவர்கள் தேவையில்லை, மருந்துகள் தேவையில்லை..! தொடர்ந்து நமது நாட்டினுடைய பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் போற்றி பாதுகாப்போம்" என்றார்.



from Latest news https://ift.tt/vzLdW8X

Post a Comment

0 Comments