சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (39). இவரின் மனைவி அனுராதா. கடந்த 20.11.2017-ம் தேதி அனுராதாவுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மனைவி அனுராதாவைத் தாக்கியதோடு, தின்னர் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அனுராதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜெயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் 23.11.2017-ம் தேதி சிகிச்சை பலனின்றி அனுராதா உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோட்டூர்புரம் போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததோடு சாட்சிகளையும் ஆஜர்படுத்தினர். வழக்கு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இரு தரப்பு வழக்கு விசாரணை நிறைவடைந்து 2.3.2023-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் எதிரி ஜெயகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு 20,000 ரூபாய் அபராமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த கோட்டூர்புரம் போலீஸாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.
from Tamilnadu News https://ift.tt/ne7FmAW
0 Comments