மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ.பிரகாஷ் சுர்வே, கட்சியின் பெண் நிர்வாகி சீத்தல் மாத்ரேயிக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோ போலியானது என்றும், அதனை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா நிர்வாகிகள் தான் போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்று சீத்தல் மாத்ரே தெரிவித்துள்ளார். அதோடு இந்த வீடியோ உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்துதான் வந்தது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த சர்ச்சைக்குறிய வீடியோ தொடர்பாக ஏற்கனவே அசோக் மிஸ்ரா மற்றும் மனாஸ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களோடு சேர்த்து விநாயக் தர்வே என்பவரையும் கைது செய்துள்ளனர். விநாயக் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அதோடு தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்ல ஃபேஸ்புக் பக்கத்தையும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஃபேஸ்புக் பக்கத்தையும் விநாயக்தான் கையாண்டு வருகிறார். மேலும் யுவசேனாவை சேர்ந்த சாய்நாத் மற்றும் ரவீந்திர செளத்ரி என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.
போலி வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை நடத்தவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இப்பிரச்னை குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சர் சம்புராஜ் தேசாய் அவையில் அறிவித்தார். இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் திட்டமிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதால் இது குறித்து முழுமையாக விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகிகள் இடையே ஒருவரை ஒருவர் களங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை தங்களது பக்கம் இழுக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சியினர் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
from Tamilnadu News https://ift.tt/2nUvKCH
0 Comments