ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய ஸ்டாலின்... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்டோபர் 19-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி, நவம்பர் 27-ம் தேதி திருப்பியனுப்பினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்ததுடன், டிசம்பர் 2-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடக் கேட்டுக்கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆனால் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திய ஆளுநர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதாக தகவல் கசிய, எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால்தான் ஆளுநர் ரவி, மசோதாவுக்கு கையெழுத்திட மறுக்கிறாரா?’ என சாடினார். அதற்கடுத்த வாரத்திலேயே மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர்.

``ஆன்லைன் சைபர் என்பது மத்திய அரசின் வரம்புக்குள் வரும் விஷயம். எனவே சீரான முறையில் தேசிய அளவில் ஒழுங்காற்று நடவடிக்கையே இதில் அவசியமேயொழிய மாநில அரசு மட்டுமே ஒழுங்குமுறையோ சட்டத்தையோ கொண்டு வருவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசாங்கமும் சட்டம் இயற்ற முடியாது. இந்த விஷயங்களை ஏற்கெனவே தெளிவுபடுத்தி அறிவுறுத்திய பிறகும் மாநில அரசு முன்பு அவசர சட்டத்தில் நிறைவேற்றிய அதே அம்சங்களையே ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஒரு மாநில அரசாங்கத்தால் திறமையான விளையாட்டை ஒழுங்குபடுத்த மட்டுமே முடியும், முற்றிலும் தடை செய்ய முடியாது.” என்று திருப்பி அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியானது.

நாடாளுமன்றம்

ஆனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. மார்ச் 21-ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி பார்த்திபன் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “பந்தயம் மற்றும் சூதாட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இல் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது” என்றார்.

மத்திய அரசு இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் இதை தெளிவுபடுத்திவிட்டது என்கிறது தி.மு.க வழக்கறிஞர் தரப்பு. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் தரப்பு, ``ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறியது ஆணவத்தின் உச்சம், ஒரு சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டியது நீதிமன்றம்தான். ஆளுநர் என்பவர் மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஓர் அதிகாரி. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டமியற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு 2 முறை கூறிவிட்டது. எனவே ஆளுநர் இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுநர் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?” என்கிறார்கள்.

இதனிடையே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது” என்றார். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால், அந்த சட்டவரைவிற்கு ஆளுநர் கட்டாயம் இசைவு தரவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் 200-வது பிரிவு குறிப்பிடுகிறது. அதேசமயம், “ஆன்லைன் கேமிங் என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். எனவே மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தருவாரா? ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from Tamilnadu News https://ift.tt/5NFOMxR

Post a Comment

0 Comments