'அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்?' - உலக நாடுகள் உற்று நோக்கும் பயணம், ஏன்?!

"கடுமையான பின்விளைவுகளை..."

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைவதாக அறிவித்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், "உக்ரைன் நேட்டோ படையில் இணைய தொடர்ந்து முயன்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

உக்ரைன் பாக்முட் நகரம்

இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார் புதின். அதன்படி இருநாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

500 மில்லியன் டாலருக்கு உதவி:

இதில் உக்ரைன் நாட்டின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். மறுபுறம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இதனால் அந்த நாடும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஷ்ய படைகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி

இதற்கிடையில் கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், "உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது" என தெரிவித்தார். இது ரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

"1,100 பேர் பலி..."

இதையடுத்து ரஷ்ய படைகள் பாக்முட் நகரத்தை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஏனெனில் இந்த நகரத்தை கைப்பற்றுவதன் மூலம் எளிதாக அந்த நாட்டை வலுவிழக்க செய்ய முடியும் என ரஷ்யா நம்புகிறது. பதிலுக்கு உக்ரைனும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இரண்டு பக்கத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஜெலன்ஸ்கி - புதின்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "கடந்த சில நாள்களில் மட்டும் ரஷ்ய படைகளை சேர்ந்த 1,100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலர் படுகாயமடைத்திருக்கிறார்கள்" என்றார். பதிலுக்கு ரஷ்யா, "உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 220 வீரர்களை பலியாகியிருக்கிறார்கள்" என தெரிவித்திருக்கிறது.

"பாக்முட்டில் வாழ்த்த 70,000 மக்கள்..."

முன்னதாக இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கு முன்பு பாக்முட் பகுதியில் 70,000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் அமைத்திருக்கும் உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்கள் மற்றும் பெரிய ஒயின் ஆலைகள் மிகவும் பிரபலமானது.

ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் இந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் உக்ரைனும் அதை விட்டுவிடாமல் கடுமையாக போராடி வருகிறது. முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, "பாக்முட் எங்கள் மன உறுதியின் கோட்டை" என்றார்.

"3-வது முறையாக..."

மேலும் அவர் அமெரிக்க காங்கிரஸுக்கு ஒரு பாக்முட் கொடியையும் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மேற்கத்திய அதிகாரிகள், "பாக்முட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 20,000 முதல் 30,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இவ்வாறு இந்த பிரச்னை மிக தீவிரமாக இருக்கும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றிருக்கிறார். அந்த நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியாக இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

"வலிமை மிக்க தலைவராக..."

இதை அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவி ஏற்றுக்கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு அதிக முறை அதிபராகியிருக்கும் ஒரே தலைவர் ஜி ஜின்பிங் இருக்கிறார்.

மாவோ

முன்னதாக கடந்த அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் ஜி ஜின் பிங், அதையும் மாற்றினார். எனவே உலகில் இருக்கும் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

"அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம்..."

இவரின் அரசு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அதை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று தான் அழைத்து வருகிறது. இந்நிலையில் தான் 3-வது முறையாக பதவியேற்றிருக்கும் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் ரஷ்யா செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யா, சீனா

இது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை தொற்றிக்கொள்ள செய்திருக்கிறது. இதுகுறித்து பேசிய சீன அதிபர் மாளிகை வட்டாரங்கள், "சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பரும் அந்த நாட்டின் அதிபருமான விளாடிமிர் புதினை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் இருக்கக்கூடும்" என்றனர்.

"மாஸ்கோ சென்ற வாங் யீ"

மேலும் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ரஷ்யாவின் டாஸ் (Tass) செய்தி நிறுவனம், "கடந்த ஜனவரி 30-ம் தேதி சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ரஷ்யா அதிபர் புதின் பேசினார். அப்போது அவர் ரஷ்யாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்" என தெரிவித்திருக்கிறது. மேலும் பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, "சீனா அதிபர் ஜி ஜின்பிங் - ரஷ்யா அதிபர் புதின் இடையேயான சந்திப்பு ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறலாம்" என தெரிவித்திருந்தது.

புதின்

இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பான கேள்விக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகமும், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் உடனடியாக பதிலளிக்கவில்லை. முன்னதாக கடந்த மாதம், மாஸ்கோவிற்கு சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ (Wang Yi), ரஷ்யா சென்றிருந்தார், அவருக்கு புதின் விருந்தளித்திருந்தார்.

"கையெழுத்தான "வரம்புகள் இல்லை" ஒப்பந்தம்..."

அப்போது உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த சந்திப்பு பின்நாளில் சீனா அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சமிக்கைகளை வழங்கும் வகையில் இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டுக்களுக்கான தொடக்கவிழா நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக புதின் சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான `வரம்புகள் இல்லை’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

பெய்ஜிங்

சீனாவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து ஜி ஜின்பிங் 39 முறை ரஷ்ய புதினை நேரில் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய ஆசியாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு நாடுகளுக்கு எதிரான இருபெரும் தலைவர்களும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest news https://ift.tt/PUBqAlH

Post a Comment

0 Comments