திரிபுராவில் முதன்முறையாக திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி) சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறது. எந்தக் கட்சியும் சார்ந்திருக்காமல், தனித்து போட்டியிட்ட திப்ரா மோத்தா கட்சி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கட்சியாக மாறியிருக்கிறது. இந்தக் கட்சியின் தலைவர் அரச வாரிசான பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய டெப் பர்மா (Pradyot Bikram Manikya Deb Barma).
இவரின் தந்தை கிரித் பிக்ரம் டெப் பர்மா மூன்று முறை எம்.பி-யாகவும், அவரின் தாயார் பிபு குமாரி, இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். 2021 திரிபுரா பழங்குடியினர் பகுதிகள், தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தல் வரையில் பிரத்யோத் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. என்றாலும், திரிபுராவின் திப்ரா மக்களுக்கான போராட்டங்கள், இயக்கங்களில் அவர் தீவிரம் காட்டிவந்தார்.
இவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவந்தார். அதைத் தொடர்ந்து, திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் தலைமை நியமித்தது.
ஆனால், சில மாதங்களிலேயே, ஊழல்வாதிகளுக்கு இடமளிக்க காங்கிரஸ் மேலிடம் அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி 25 பிப்ரவரி 2019 அன்று ராஜினாமா செய்தார் பிரத்யோத். காங்கிரஸிலிருந்து வெளியேறிய பிரத்யோத், டெப் பர்மா பெயரில் சமூக அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றவும் முடிவுசெய்தார். எனவே, பிப்ரவரி 5, 2021 அன்று திப்ரலாந்து எனும் தனி மாநிலக் கோரிக்கையுடன் தனது அமைப்பை திப்ரா மோத்தா என்ற அரசியல் கட்சியாக மாற்றிவிட்டதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். INPT (Twipra-ன் உள்நாட்டு தேசியவாத கட்சி), TSP (திப்ராலாந்து மாநிலக் கட்சி) மற்றும் IPFT ஆகியவை 2021-ல் திப்ரா கட்சியில் இணைந்தன. 2021-ல் நடந்த திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில், திப்ரா மோத்தா 16 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான INPT இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றன. இதன் மூலம் பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் 15 ஆண்டுக்கால இடதுசாரிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இதற்கிடையே, திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் 20 இடங்கள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், திப்ரா மோத்தா கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 42 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி வைக்க வேண்டுமானால் திரிபுராவிலிருந்து திப்ராலாந்து, தனிமாநில கோரிக்கைக்கு ஆதரவு தரும் தேசியக் கட்சி தரப்பிடமிருந்து எழுத்துபூர்வ ஒப்புதல் தர வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்தது.
அதை எந்த தேசியக் கட்சியும் ஏற்காத நிலையில், தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் அறிவித்தார். 2019-ல் தொடங்கப்பட்ட கட்சிதானே.... என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடும்... என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு திப்ரா மோத்தா கட்சி கடுமையான போட்டியைக் ஏற்படுத்தியிருப்பது கவனிக்கப்படுகிறது.
தற்போது பா.ஜ.க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் இருந்தாலும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 60 தொகுதிகளைக்கொண்ட திரிபுராவில் 10 தொகுதிகளுக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது திப்ரா மோத்தா.
from Tamilnadu News https://ift.tt/qDudpWl
0 Comments